தக்கவைக்கும்
இயந்திரம்
டாக்டர் லேப்ரின்
கண்களை மங்கலாக மூடியவாறே தனது புல்வெளி நாற்காலியில் சாய்ந்தார். போர்வையை முழங்காலுக்கு
மேலே இழுத்துவிட்டுக்கொண்டார்.
”அதாவது?” நான்
பேச்சு கொடுத்தேன். இறைச்சி சுடும் கனலடுப்பின் அருகே நின்று என் கைகளை தேய்த்துக்
கொண்டிருந்தேன். அதுவொரு தெளிவான குளிர்நாள். லாஸ் ஏஞ்சல்ஸின் பிரகாசமான வானத்தில்
கிட்டத்தட்ட மேகங்களே இருக்கவில்லை. லேப்ரினுடைய அந்த நடுவாந்திரமான வீட்டுக்குப் பின்னால்
மலையடிவாரத்தின் எல்லை வரை மரங்கள் அடர்ந்த பசுமையின் நீட்சி இருந்தது – அது நகரத்தின்
எல்லைக்குள்ளேயே ஒரு சிறிய வனத்தில் வாழ்வதுபோன்ற உணர்வை தந்தது. “அதாவது?” நான் பேச
முற்பட்டேன். “அவ்வாறெனில், இயந்திரம் நீங்கள் எதிர்பார்த்த மாதிரி வேலை செய்துவிட்டது
அல்லவா?”
லேப்ரின் பதிலளிக்கவில்லை.
நான் சுற்றிலும் நோக்கினேன். முதியவர் மந்தமாக வெறித்தவாறே தனது போர்வையின் பக்கவாட்டில்
பொறுமையாக ஏறிக் கொண்டிருக்கும் பெரிய பழுப்புநிற வண்டை கவனித்துக் கொண்டிருந்தார்.
சீராக மேலேறி வந்த அவ்வண்டின் முகம் கண்ணியத்துடன் இருந்தது. சட்டென மேலே பறந்து அகன்று
பின்னர் கொஞ்ச தொலைவில் காணமாலானது. நாங்கள் மீண்டும் தனிமையில் விடப்பட்டோம்.
லேப்ரின் பெருமூச்சு
விட்டவாறே என்னைப் பார்த்தார். “ஓ, அது சிறப்பாகவே வேலை செய்தது.”
நான் அந்த வண்டை
தேடினேன், ஆனால் அதை எங்கேயும் காணவில்லை. மதியத்தின் மறைந்துகொண்டிருக்கும் மெல்லொளியில்,
என்மீது இதமான தென்றல் காற்று சுழன்று சென்றது. நான் கனலடுப்பின் அருகேசென்று ஒட்டியவாறு
நின்றுகொண்டேன்.
“அதைப் பற்றி சொல்லுங்கள்,”
கையில் மிகுதியான
நேரமும் நிறைய வாசிப்பு பழக்கமும் உள்ள பெரும்பாலனவர்களைப் போல டாக்டர் லேப்ரினும்
நமது நாகரிகம் அழிவின் (ரோமின்) பாதையில் சென்றுகொண்டிருப்பதாய் நம்பினார். அவர் பண்டைய
உலகங்களான ரோமையும் கிரேக்கத்தையும் வீழ்த்திய அதே விரிசல்களை, நமது சமூகத்திலும் கண்டுவிட்டார்
என நினைக்கிறேன். மேலும் நமது இன்றைய உலகமும் அந்த பழைய உலகங்களைப் போலவே கடந்து போகும்
எனவும், அதன்பின்னர் ஒரு இருண்ட காலத்தின் தொடக்கம் உருவாகும் எனவும் நம்பினார்.
லேப்ரின் இந்த
சிந்தனையை அடைந்த பிறகு, அவ்வாறு சமூகங்களின் மறுசீரமைப்பின்போது இழக்கப்பட வாய்ப்புள்ள
சிறப்பான, அழகிய விஷயங்களை பற்றி யோசித்தார், குறிப்பாக கலைகள் குறித்து. இலக்கியம்,
நடத்தை முறைகள், இசை என அனைத்தையும் பரிசீலித்தார். மாண்பும் மேன்மையும் மிகுந்த இந்த
விஷயங்களுள், அநேகமாக இசையே பெரிதும் இழக்கப்படக்கூடியதும் விரைவில் மறக்கப்படக்கூடியதுமாக
அவருக்குப் பட்டது.
இசை இருப்பதிலேயே
மிக நொய்மையானதும், நுட்பமானதும் எளிதில் அழிக்கப்படக்கூடியதுமாகும்.
இசையை காதலிக்கும்
லேப்ரின், இதுகுறித்து வருத்தமுற்றார். ஏனெனில் மொசார்ட்டும்1 ப்ராம்ஸும்2
இல்லாத நாளைக் குறித்த எண்ணத்தையே அவர் வெறுத்தார். அதன்பின்னர் சாந்தமான அரங்கில்
கேட்கும் இசையோ, அதன் கனவுகளுடன் இணைந்து கொள்ளும் மெலிந்த நீளமான உருகி மறையும் மெழுகுவர்த்திகளோ
இருக்காது.
இசை இல்லாத அவ்வுலகம்தான்
எத்தனை துரதிர்ஷ்டமானது! அது நிச்சயம் வறட்சியானதாகவும் தாங்கமுடியாததாகவும் இருக்கும்.
அவர் தக்கவைக்கும்
இயந்திரம் குறித்த யோசனைக்கு வந்தடைந்தது இவ்வாறுதான்: ஒருநாள், மாலைப்பொழுதில் தனது
வரவேற்பறையில் உள்ள உயரமான நாற்காலியில் அமர்ந்திருந்தார். இசைத்தட்டின் மெல்லிய ஒலி
பின்னணியில் கசிந்துகொண்டிருந்தது. அப்போது அவருக்கு ஒரு காட்சித் தோன்றியது. அந்த
வினோதமான காட்சியில் ஸ்குபெர்ட் ட்ரியோ3 இசைத்துணுக்கின் பலமுறை பயன்படுத்தப்பட்ட
கடைசிப் பிரதி ஒன்று தரையில் விழுந்து கிடந்தது. பாழடைந்திருந்த அவ்விடம் அநேகமாக ஒரு
அருங்காட்சியகமாக இருக்க வேண்டும்.
ஒருவன் திடீரென
தலைக்கு மேலிருந்து குண்டுவீசத் தொடங்கினான். குண்டுகள் விழுந்து அருங்காட்சியகம் சிதறியது.
இடிபாடின் பெரும்சப்தத்துடன் சுவர்கள் சரிந்தன. இடிபாடுகளினிடையே மறைந்த அந்த கடைசி
இசைத்துணுக்கு, அழுகும் குப்பை கூளங்களில் எப்போதைக்குமாக தொலைந்து போனது.
அதன்பின் டாக்டர்
லேப்ரின் கண்ட காட்சியில், அந்த இசைத்துணுக்கு ஒரு புதைக்கப்பட்ட அகழெலியைப்போல4
மண்ணைதோண்டியவாறு மீண்டெழுந்து வருவதைப் பார்த்தார். அகழெலியைப்போல விரைவாகவும், இன்னும்
சொல்லப்போனால் நகங்களுடனும் கூரிய பற்களுடனும் சீற்றத்தின் ஆற்றலுடனும் இருந்தது.
அன்றாடம் உயிர்பிழைத்து
வாழ்தலுக்கான உள்ளுணர்வை ஒவ்வொரு புழுவும் அகழெலியும் கொண்டிருப்பதைப்போல, ஒருவேளை
இசையும் அந்த சாத்தியத்தைக் கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இசையை உயிருள்ள
பிராணிகளாக மாற்ற முடியுமானால், நகமும் பற்களும் உடைய விலங்குகளாக அவை ஆகுமென்றால்,
அது தானாகவே உயிர்பிழைத்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் இசைத்துணுக்குகளை
உயிருள்ள வடிவங்களாக உருமாற்றும் ஒரு இயந்திரத்தை மட்டும் கட்டமைத்தால் போதும்.
ஆனால் டாக்டர்
லேப்ரின் ஒரு இயற்பியலாளர் அல்ல. எனவே அவர் ஒரு உத்தேசமான வரைவுத்திட்டத்தை உருவாக்கி,
மிகுந்த எதிர்பார்ப்புடன் சில ஆராய்ச்சி மையங்களுக்கு அனுப்பிவைத்தார். அவர்களுள் பெரும்பாலனவர்கள்
வழக்கம்போல போர் தொடர்பான ஒப்பந்த பணிகளில் மும்முரமாக இருந்தனர். ஆனால் இறுதியாக அவருக்கு
வேண்டியவர்களை அவர் கண்டடைந்தார். மத்திய மேற்கு பகுதியில் அமைந்த ஒரு சிறிய பல்கலைகழகம்
இவரது வரைவுதிட்டத்தை கண்டு மகிழ்ச்சியடைந்து, உடனடியாக இயந்திர உருவாக்கத்திற்கான
பணிகளையும் தொடங்கிவிட்டனர்.
வாரங்கள் கடந்தன.
இறுதியாக லேப்ரினுக்கு பல்கலைகழகத்திலிருந்து ஒரு தபால் வந்தது: இயந்திரம் சிறப்பாக
உருவாகி வருகிறது; பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன.
அவர்கள் ஒரு சோதனை
ஓட்டம் செய்து பார்க்க இரண்டு வெகுஜன பாடல்களை உள்ளீடு செய்தனர். முடிவுகள்? இயந்திரத்திலிருந்து
வெளிவந்த எலியைப் போன்ற இரு சிறிய விலங்குகள் ஆய்வகத்தை சுற்றி தாறுமாறாக ஓடின. சிறிதுநேரத்தில்
ஒரு பூனை அவற்றை பிடித்து உண்டுவிட்டது. எனினும் இயந்திரத்தின் செயல்பாடு என்பது வெற்றிதான்.
அதன்பின்னர் விரைவிலேயே
அவரிடம் இயந்திரம் வந்துசேர்ந்தது. ஒரு மரப்பெட்டியில் கவனமாக இடப்பட்டு, மின்கம்பிகள்
இணைக்கப்பட்ட நிலையில் முழுமையான பாதுகாப்புடன் வந்திருந்தது. மரத்துண்டுகளை பிரித்தெடுத்தவாறே
அதை இயக்கப் போகும் பரவசத்தில் அவர் ஆழ்ந்தார். முதல் உருமாற்றத்திற்கான கட்டுப்பாட்டு
அமைப்புகளை சரிபார்த்துக்கொண்டிருக்கையில் அவரது மனதில் பல்வேறு கற்பனைகள் கடந்துபோயிருக்க
வேண்டும். அவர் ஒரு விலைமதிப்பற்ற இசைத்துணுக்கை தேர்ந்தெடுத்து வைத்திருந்தார், மொசார்ட்
ஜி மைனர்.
குவிண்டெட்5.
சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தவாறே அதன் பக்கங்களை புரட்டினார், அவரது மனம் எங்கோ
வெகுதொலைவில் இருந்தது. ஒருவழியாக அதை எடுத்துக் கொண்டுவந்து இயந்திரத்தினுள் இட்டார்.
நேரம் கடந்தது.
லேப்ரின் அதன்முன் நின்று பதற்றத்துடன் காத்திருந்தார். இயந்திரத்தை திறக்கும்போது,
அவருக்கு முகமன்கூற அதிலிருந்து வெளிவரப்போவது என்ன என்பதுகுறித்து அவருக்கு எந்த உறுதியும்
இருக்கவில்லை. அவர் ஒரு சரியான மற்றும் சாகசமான பணியை செய்வதாக அவருக்கு பட்டது. மாபெரும்
இசையமைப்பாளர்களின் இசையை காலத்தின் முடிவிலிவரை தக்கவைக்கப் போகிறார். அவரது நன்றி
என்னவாக இருக்கும்? அவர் என்ன கண்டடைவார்? எல்லாம் முடிவதற்குள், இவையெல்லாம் என்ன
உருவெடுக்கும்?
பதிலளிக்கப்படாத
பல கேள்விகள் இருந்தன. அவர் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்போதே இயந்திரத்தின் சிகப்பு
விளக்கு மின்னியது. செயலாக்கம் முடிந்து, ஏற்கனவே உருமாற்றம் நிகழ்ந்துவிட்டிருந்தது.
கதவை திறந்தபோது..
”அடக் கடவுளே!”
லேப்ரின் சொன்னார். ”இது மிகவும் வினோதம்.”
வெளிவந்தது ஒரு
பறவை, விலங்கல்ல. மொசார்ட்டின் அப்பறவை அழகானது. ஒல்லியான அச்சிறுபறவை, அலையும் மயில்தோகையுடன்
இருந்தது. அறையின் குறுக்காக சிறிதுதூரம் நடந்து சென்று, பின்னர் திரும்பி அவரை நோக்கி
நட்புடனும் ஆர்வத்துடனும் வந்தது. டாக்டர் லேப்ரின் குனிந்து, நடுங்கியவாறே தன் கைகளை
நீட்டினார். அருகில் வந்த பறவை, பின்னர் திடீரென கீச்சொலி எழுப்பியவாறே காற்றில் மேலெழுந்து
அகன்று சென்றது.
”அற்புதம்,” அவர்
முனுமுனுத்தார். அப்பறவையிடம் பொறுமையாகவும் மென்மையாகவும் பேசி சமாதானம் செய்ய முயன்றார்.
இறுதியில் படபடத்தவாறு அவரிடம் வந்தணைந்தது. லேப்ரின் அதுகுறித்து நீண்டநேரம் சிந்தித்தார்.
மற்றவையெல்லாம் என்னவாக உருக்கொள்ளும்? அவரால் யூகிக்க இயலவில்லை. மொசார்ட்டின் பறவையை
கவனமாக எடுத்து ஒரு பெட்டியில் போட்டு வைத்தார்.
அடுத்தநாள் பீத்தோவன்6
வண்டு திடமாகவும் கம்பீரத்துடனும் வெளிவந்தபோது அவர் மேலும் வியப்படைந்தார். அந்த வண்டுதான்
அவரது போர்வையில் ஏறிக் கொண்டிருக்கையில் நான் முன்பு பார்த்தது. முன்னேறியவாறும் பின்னடைந்தவாறும்
தனது சொந்த வேலையாக ஏதோ செய்து கொண்டிருந்தது அவ்வண்டு.
அடுத்ததாக வெளிவந்தது
ஸ்கூபெர்ட்7 விலங்கு. ஸ்கூபெர்ட் விலங்கு வேடிக்கையானது. பதின்ம வயது செம்மறியாட்டைப்போல
இருந்த அது இங்குமங்கும் ஓடியவாறு முட்டாள்த்தனமாகவும் விளையாடும் ஆவலுடனும் இருந்தது.
லேப்ரின் உடனடியாக அங்கேயே உட்கார்ந்து தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினார்.
சரி, உயிர்பிழைப்பதற்க்கான
காரணிகள் என்னென்ன? அலையும் மயிலிறகுகள், நகங்களைக் காட்டிலும் அல்லது கூரிய பற்களை
காட்டிலும் சிறப்பானதா? லேப்ரின் திகைத்து நின்றார். அவர் எதிர்பார்த்ததோ உறுதியான
உடலும் நகங்களும் கொண்ட ஒரு ராணுவப் படையை: செதில்களும், கூரிய பற்களும் உகிர்களும்
உடையவை, அகழ்ந்துசெல்லக் கூடியதும், சண்டையிடக்கூடியதும், எட்டி உதைக்கவும் கடித்துத்
துண்டாக்கவும் தயாராக உள்ள பிராணிகளை. அவருக்கு சரியான முடிவுகள்தான் கிடைத்து வருகிறதா?
ஆனால் உயிர்பிழைத்தலுக்கு எது உகந்தது என யார்தான் சொல்லிவிட முடியும்? –- டைனோசர்கள்
நிறைவான படைக்கலங்களுடன்தான் இருந்தன, எனினும் அவற்றில் ஒன்றுகூட எஞ்சவில்லை. எவ்வாறு
இருப்பினும் இயந்திரம் கட்டமைத்தாகிவிட்டது; இனி பின்னடைய காலமில்லை.
லேப்ரினின் திட்டம்
தொடர்ந்தது. பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையை ஒன்றன்பின் ஒன்றாக தக்கவைக்கும் இயந்திரத்தில்
உள்ளீடு செய்யத் தொடங்கினார். அவரது வீட்டின் பின்னால் உள்ள மரங்கள் முழுக்க கத்தும்,
ஊர்ந்துசெல்லும், இரவில் சப்தமிடும் வினோத உயிர்களால் நிறைவதுவரை அவர் நிறுத்தவில்லை.
அவரை ஆச்சரியப்படுத்தும் வகையிலும் திடுக்கிடவைக்கும் வகையிலும் பல தனித்துவமான படைப்புகள்
வெளிவந்தன. ப்ராம்ஸ்2 பூச்சி தட்டையான வடிவில், அனைத்து திசைகளிலும் பரவும்வகையில்
பலகால்கள் கொண்ட பூரான் போன்று காட்சியளித்தது. குள்ளமாகவும் உடலின்மேல் மென்மயிர்
கொண்டதாகவும் இருந்தது. தனிமை விரும்பியாக தெரிந்த ப்ராம்ஸ் பூச்சி, அதற்கு சற்றுமுன்னர்
வெளிவந்திருந்த வாக்னர்6 விலங்கை பெறும் சிரமத்துடன் தவிர்த்து உடனடியாக
வெளியேறியது்.
வாக்னர் விலங்கு
அளவில் மிகப்பெரியதாக, அடர் வண்ணங்களுடன் இருந்தது. கோபக்கார விலங்காக தெரிந்த அதைக்
கண்டு லேப்ரின் அஞ்சினார். அவரைப்போலவே பாக்7 மூட்டைப்பூச்சிகளும் அதைக்
கண்டு அஞ்சின. பந்து போன்ற உருண்டைவடிவ உயிர்களான அக்குழுவில், சிறிதும் பெரிதுமாக
மொத்தம் நாற்பத்திஎட்டு பூச்சிகள் இருந்தன. அவை நாற்பத்தி எட்டு முன்னிசை மற்றும் ஆலாபனைகளுக்காக8
பெறப்பட்டவை. பிறகு அங்கொரு ஸ்டார்வின்ஸ்கி9 பறவை இருந்தது. அது ஆர்வமூட்டும்
பல துண்டுகளால் இணைக்கப்பட்ட உருவாக இருந்தது.
அவர் அவற்றை தன்வீட்டின்
பின்னுள்ள வனத்தினுள் போகவிட்ட்டார். அவை தத்தியவாறும், உருண்டவாறும், தங்களால் இயன்றவரை
குதித்தவாறும் விலகி சென்றன. ஆனால் அதற்குள்ளாக அவருக்கு ஒருவித தோல்வியுணர்வு உருவாகிவிட்டிருந்தது.
ஒவ்வொருமுறை ஓர் உயிரினம் வெளிவரும்போதும் அவர் ஆச்சரியமுற்றார். முடிவுகள் எதுவும்
அவரது கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. அனைத்தும் அவரது கைமீறி சென்றுகொண்டிருந்தன.
யாரும் அறியாத வண்ணம், ஒரு வலுவான கண்ணுக்குத்தெரியாத விதியின்கீழ் அனைத்தும் இயங்குவதாகப்
பட்டது. இது அவரை கவலைக்குள்ளாக்கியது. அந்த உயிரினங்கள், லேப்ரினால் தெரிந்து கொள்ளவோ
புரிந்து கொள்ளவோ இயலாத ஒரு தீவிரமான பொதுவிசையின் கீழ் வளைந்து உருமாறிக்கொண்டிருந்தன.
இதனால் அவர் அச்சமுற்றிருந்தார்.
லேப்ரின் உரையாடுவதை
நிறுத்தினார். நான் நீண்டநேரம் காத்திருந்து பார்த்தும் அவர் தொடர்வதாகத் தெரியவில்லை.
அவரைச் சுற்றி நோக்கினேன். அந்த முதியவர் ஒரு வினோதமான உணர்ச்சியற்ற பாவனையில் என்னை
வெறித்தார்.
“உண்மையில் அதற்குமேல்
எனக்கு ஒன்றும் தெரியாது”
”நான் வனுத்தினுள்
சென்று நீண்ட காலம் ஆகிறது. நான் அங்குசெல்ல பயப்படுகிறேன். அங்கு ஏதோ நடந்துக் கொண்டிருக்கிறது
என அறிவேன், ஆனால் –-”
”நாம் ஏன் இருவரும்
இணைந்துசென்று ஒருமுறை பார்க்கக் கூடாது?”
அவர் அழுத்தத்திலிருந்து
விடுபட்டதைப்போல புன்னகைத்தார். ”உனக்கு இதில் எதுவும் சிரமம் இல்லையல்லவா? நீ இதை
பரிந்துரைப்பாய் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த செயல்பாட்டினால் நான் மிகவும்
சோர்வுற தொடங்கியுள்ளேன்”. தனது போர்வையை விலக்கியவாறு உத்வேகத்துடன் எழுந்து நின்றார்.
“அப்படியெனில் செல்வோம்.”
நாங்கள் வீட்டின்
பக்கவாட்டில் உள்ள சந்தின் வழியாக நடந்துசென்று வனத்தை அடைந்தோம். அங்கிருந்தவை யாவும்
மிகைவளர்ச்சியடைந்ததாகவும் ஒழுங்கற்ற முறையிலும் இருந்தன. திருத்தப்படாத, யாராலும்
தீண்டப்படாத பசுமையின் கடலது. டாக்டர் லேப்ரின் பாதையில் இருந்த கிளைகளை அகற்றியாவாறும்
தடைகளுக்கேற்ப குனிந்துநெளிந்தவாறும் முன்னால் சென்றார்.
”அருமையான இடம்,”
என் வியப்பை பகிர்ந்துகொண்டேன். சிறிது நேரம் எங்கள் பாதையில் சென்றிருப்போம். மரங்கள்
இருளில் மங்கலடைந்தன; இப்போது கிட்டத்தட்ட அந்தி நெருங்கிவிட்ட நிலையில், மேலிருந்த
இலைகளினூடாக மெல்லியபனி எங்கள்மேல் இறங்கியது.
“இங்கு எவருமே
வருவதில்லை.” டாக்டர் லேப்ரின் திடீரென நின்று சுற்றிலும் நோக்கினார். ”நாம் எதற்கும்
சென்று எனது துப்பாக்கியை எடுத்துக் கொள்வது நல்லது. ஏதேனும் அசம்பாவிதங்கள் நடப்பதை
நான் விரும்பவில்லை”
”காரியங்கள் உங்கள்
கைமீறிவிட்டதாக நீங்கள் உறுதியுடன் நம்புவதாகத் தெரிகிறது.” நான் அருகேசென்று அவருடன்
இணைந்து நின்றேன். ”ஒருவேளை நீங்கள் யோசிக்கும் அளவிற்கு அவை மோசமடையாமல் இருக்கலாம்.”
லேப்ரின் அனைத்து
திசைகளிலும் நோக்கினார். சில புதர்ச்செடிகளை காலால் பின்தள்ளினார். ”அவை நம்மை சுற்றி
எங்கும் இருக்கின்றன, அனைத்து இடங்களிலும். அவை நம்மை கண்கானிக்கின்றன. நீ அதை உணரவில்லையா?”
நான் வெறுமனே தலையசைத்தேன்.
”என்ன இது?” நான் அங்கிருந்த ஒரு கனமான மட்கிக்கொண்டிருக்கும் கிளையை தூக்கியவாறே கேட்டேன்.
அதிலிருந்து பூஞ்சைத் துகள்கள் உதிரிந்தன. அக்கிளையை தள்ளி அப்பாலிட்டேன். அதனடியில்
தெளிவற்ற சிறுகுன்றின் வடிவில், மண்ணில் பாதி புதைந்த நிலையில் ஏதோவொன்று நீட்டிக்
கிடந்தது.
“என்ன இது?” நான்
மீண்டும் கேட்டேன். லேப்ரின் அதை நோக்கியதும் அவரது முகம் முதலில் இறுக்கமடைந்து பின்னர்
விகாரமாக ஆனது. அவர் அந்த சிறுகுன்றின்மீது இலக்கில்லாமல் மிதிக்க தொடங்கினார். நான்
அசெளகரியமாக உணர்ந்தேன். ”தயவுசெய்து இது என்னவென்று சொல்லித் தொலையுங்கள்! உங்களுக்கு
இது என்னவென்று தெரியுமா?” நான் கத்தினேன்.
லேப்ரின் பொறுமையாக
திரும்பி என்னை பார்த்தார். ”இது ஸ்கூபெர்ட் விலங்கு,” அவர் முனுமுனுத்தார். “அல்லது
ஒருசமயம் அவ்வாறாக இருந்தது, தற்போது அதன் முதலிருந்த தோற்றத்துக்கான அடையாளங்களே பெரும்பாலும்
இல்லை.”
ஸ்கூபெர்ட் விலங்கு
– அதுதான் முன்பு ஒரு நாய்குட்டியைப் போல குதித்து ஓடியதும், வேடிக்கையானதும், விளையாடும்
ஆர்வத்துடன் இருந்ததுமாகும். நான் கீழே குனிந்து, அதை மூடியிருந்த சருகுகளை விலக்கினேன்.
அது இறந்துவிட்டிருந்தது. அதன் வாய் திறந்த நிலையிலும் உடல் பிளக்கப்பட்டும் கிடந்தது.
எறும்புகள் புழுக்களும் அதற்குள்ளாகவே அதன்மேல் மேய்ந்துகொண்டிருந்தன. அது நாற்றமெடுக்க
தொடங்கியது.
”ஆனால் என்ன நடந்தது?”
லேப்ரின் தலையை மறுப்பதுபோல் அசைத்தார். ”அது எப்படி நடந்திருக்கும்?”.
ஒரு சப்தம். நாங்கள்
உடனடியாக திரும்பினோம்.
சிறிது நேரத்திற்கு
நாங்கள் எதையும் பார்க்கவில்லை. பின்னர் ஒரு புதர் அசைந்தது, முதன்முறையாக நாங்கள்
அதன் முழுஉருவை பார்த்தோம். இத்தனை நேரமும் அங்கு நின்றிருந்தவாறு அது எங்களை கவனித்திருக்க
வேண்டும். அந்த உயிரினம் அளவில் மிகப்பெரியதாக, தீவிரமான ஒளிமிக்க கண்களுடன் இருந்தது.
எனக்கு அதுவொரு ஓநாயைப்போல தெரிந்தது, ஆனால் அதைவிடவும் மிக கணமானது. அதன் உடல்மயிர்
அடர்த்தியும் தடிமனும் கொண்டிருந்தது. எங்களை அமைதியாக நோக்கியவாறு ஆராய்ந்தது. எங்களை
அங்கு பார்த்ததில் அது வியப்புற்றிருக்க வேண்டும்.
”வாக்னர் விலங்கு,”
லேப்ரின் ரகசிய குரலில் சொன்னார். ”ஆனால் அது மாறியுள்ளது, என்னால் அடையாளம்காண இயலாத
அளவு மாறியுள்ளது.”
அவ்விலங்கு காதை
விடைத்தவாறு காற்றை முகர்ந்து பார்த்தது. சட்டென பின்னகர்ந்து இருளுள் மறைந்து, அடுத்த
கணத்தில் முற்றிலும் காணமலானது.
நாங்கள் சிறிதுநேரம்
எதுவும் பேசாமல் நின்றோம். இறுதியாக லேப்ரின் தூண்டப்பெற்றார். ”அப்படியெனில் அதுதான்
இல்லையா?.. என்னால் இன்னமும் நம்ப இயலவில்லை. ஆனால் ஏன்? என்ன --”
”தகவமைப்பு” நான்
சொன்னேன். ”நீங்கள் ஒரு சாதாரண வீட்டுப் பூனையை வெளியே விட்டால்கூட அது காட்டுத்தன்மை
கொண்டுவிடும். அல்லது ஒரு நாயும்.”
”ஆம்.” அவர் ஆமோதிதார்.
”நாய் மீண்டும் ஓநாயாகிறது. காட்டின் விதி. நான் இதை எதிர்பார்த்திருக்க வேண்டும்.
இது எல்லாவற்றிற்கும் நடப்பது.”
நான் மண்ணில் கிடந்த
பிணத்தையும், பின்னர் அமைதியான புதர்களை சுற்றியும் நோக்கினேன். தகவமைப்பு – அல்லது..
அதனினும் மோசமான ஏதோவொன்று. என் மனதில் ஒரு யோசனை உருவானது, ஆனால் உடனடியாக நான் எதுவும்
சொல்லவில்லை.
”நான் மேலும் சிலவற்றை
பார்க்க விரும்புகிறேன், நாம் அவற்றை தேடிப் பார்ப்போம். அவை இங்குதான் இருக்க வேண்டும்.”
அவர் ஒப்புக்கொண்டார்.
நாங்கள் சருகுகளையும் உதிரிந்த கிளைகளையும் விலக்கியவாறு புல்வெளியினூடாக தேடினோம்.
லேப்ரின் ஒரு முறிந்துபோன கிளையை கண்டடைந்தார். அதனருகில் சென்று கைகளை மூட்டில் தாங்கியவாறே
அமர்ந்து, அதை கையிலெடுந்து உற்று நோக்கினார்.
“குழந்தைகள்கூட
கருணையற்ற மிருகங்களாக மாறிவிடுகின்றன,” நான் சொன்னேன். ”இந்தியாவின் ஓநாய் குழந்தைகளை
உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர்கள் சாதாரண குழந்தைகளாக இருந்தவர்கள் என்பதை எவரும்
நம்பமாட்டார்கள்.”
லேப்ரின் தலையசைத்தார்.
அவர் மகிழ்ச்சியற்றிருந்ததற்க்கான காரணம் நான் அறியாததல்ல. அவர் தனது ஆதி யோசனையில்
தவறிழைத்துள்ளார், அதன் பின்விளைவுகளை தற்போது தெளிவுற காணத் தொடங்கியுள்ளோம். இசை,
வாழும் உயிரினங்களாக உயிர்பிழைத்திருக்கும் என்பது உண்மைதான். ஆனால் ஈடன் தோட்டத்துப்
பாடத்தை அவர் மறந்துவிட்டிருந்தார்: ஒருமுறை உயிர்கொண்டுவிட்ட படைப்பு, சுயமான இருப்பாக
ஆகிவிடுகிறது. அதன்பின் படைப்பாளியின் ஒரு உடைமையாக, அவனது ஆணைகளுக்கேற்ப செயல்படுவதாக
அது எப்போதும் இருப்பதில்லை.
மனிதர்களின் முன்னேற்றத்தை
காணும்போது, கடவுளும் இதே துயரை அடைந்திருக்கவேண்டும் –- இதே அவமானத்தையும் –- லேப்ரினைப்
போல. உயிர்பிழைத்தலின் தேவைகளுக்காக உருமாறும் தனது படைப்புகளைக் கண்டு செய்வதறியாமல்
அவர் திகைத்திருப்பார்.
இனி அவரது இசை
உயிரினங்கள் உயிர்பிழைத்திருப்பது அவருக்கு எவ்வித அர்த்தத்தையும் அளிக்கப் போவதில்லை.
அவர் எதை தவிர்க்க நினைத்தாரோ, எதிலிருந்து அந்த அழகிய விஷயங்களை காப்பாற்ற முயன்றாரோ,
அது அவரது கண்ணெதிரிலேயே அவற்றுக்கு நிகழ்கிறது. டாக்டர் லேப்ரின் சட்டென திரும்பி
என்னை பார்த்தார். அவரது முகம் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. அவர் அவற்றின் உயிர்பிழைத்தலை
உறுதிசெய்துவிட்டார் என்பது சரிதான், ஆனால் அச்செயல்பாட்டின் வழியாக அவர் அவற்றை அர்த்தமற்றதாக
மாற்றிவிட்டார். இனி அவற்றுக்கு எவ்வித மதிப்பும் இல்லை. நான் அவரை நோக்கி மெலிதாக
புன்னகைக்க முயன்றேன், ஆனால் அதற்குள் அவர் வேறுதிசை நோக்கி திரும்பிகொண்டுவிட்டார்.
”இதுகுறித்து மிகவும்
கவலை கொள்ள வேண்டாம்,” நான் சொன்னேன். ”வாக்னர் விலங்கை பொறுத்தவரை, அது பெரிய மாற்றம்
எதுவும் அடைந்துவிடவில்லை. அதன் மூல இயல்பே அவ்வாறுதான் இல்லையா? கடுமையானதும், உணர்ச்சிவசப்படுவதும்..
வன்முறை நோக்கிய சாய்வை அது முன்னரே கொண்டிருக்கவில்லையா --”
திடீரென டாக்டர்
லேப்ரின் புல்வெளியிலிருந்த தனது கைகளை வெளியிழுத்து உதறியவாறே பின்னால் சரிந்தார்.
தனது மணிக்கட்டை இறுக்கி பிடித்தவாறே வலியால் துடித்தார்.
”என்ன அது?” நான்
விரைந்தேன். நடுங்கியவாறே தனது முதிய கரத்தை என்முன்னால் நீட்டினார். ”என்ன அது? என்ன
நடந்தது?”
நான் கையை திருப்பி
பார்த்தேன். பின்பகுதி முழுவதும் காயத்தின் தாரைகளால் சிவந்திருந்தது. பார்த்துக் கொண்டிருக்கும்போதே
அதன் வீக்கம் மிகுந்து வந்தது. அவரை எதுவோ கொட்டியுள்ளது, புல்வெளியிலிருந்த ஏதோவொன்றால்
கொட்டவோ அல்லது கடிக்கவோப் பட்டிருக்கிறார். நான் கீழே நோக்கி, அப்பகுதியிலிருந்த புல்வெளியை
காலால் மிதித்தேன்.
அங்கு ஒரு சலனம்.
சிறிய பொன்னிற பந்து ஒன்று விரைவாக உருண்டு வெளியேறி, புதருக்குள் சென்று மறைந்தது.
அதன் உடல், காஞ்சொறி11 செடியைப்போல முட்களால் மூடப்பட்டிருந்தது.
“அதைப் பிடி!”
லேப்ரின் கத்தினார். “சீக்கிரம்!”
நான் முட்களை தவிர்ப்பதற்க்காக
கைக்குட்டையை எடுத்தவாறே அதன்பின்னால் ஓடினேன். அந்த பந்து என்னிடமிருந்து தப்புவதற்காக
தாறுமாறாக ஓடினாலும் ஒருவழியாக கைக்குட்டையில் பிடிபட்டது.
நான் எழுந்து நின்றவுடன்
தடுமாறிக் கொண்டிருக்கும் எனது கைக்குட்டையை லேப்ரின் நோக்கினார். ”என்னால் இதை நம்ப
முடியவில்லை,” அவர் சொன்னார். ”நாம் வீட்டிற்கு திரும்புவது நல்லது.”
”என்ன இது?”
”பாக் பூச்சிகளுள்
ஒன்று. ஆனால் இது மாறியுள்ளது...”
நாங்கள் வீட்டை
நோக்கி திரும்பினோம். இருளில் பாதையை உணர்ந்தவாறே கிளைகளை ஒதுக்கி, நான் முன்னால் சென்றேன்.
லேப்ரின் தனது புண்பட்ட கையை அடிக்கடி தேய்த்துக்கொண்டே மெளனமாக பின்தொடர்ந்தார்.
நாங்கள் வீட்டின்
முற்றத்திலிருந்த பின்பக்க படிகள்வழியாக மேலே சென்று முகமண்டபத்தை அடைந்தோம். லேப்ரின்
கதவை திறந்ததும் நேராக சமயலறைக்குள் நுழைந்தார். விளக்கை தட்டிவிட்டவாறு, கையை நனைப்பதற்காக
நீர்த்தொட்டியை நோக்கி ஓடினார்.
நான் அலமாரியிரிலிருந்து
ஒரு காலியான பழஜாடியை எடுத்து பாக் பூச்சியை கவனமாக அதனுள் இட்டேன். அந்த பொன்னிற பந்து
சோதனை செய்யும்விதமாக அதில் உருண்டு கொண்டிருந்தது. ஜாடியை இறுக்கமாக மூடிவிட்டு மேசையில்
அமர்ந்தேன். இருவருமே பேசிக்கொள்ளவில்லை. லேப்ரின் நீர்த்தொட்டியின் அருகே நின்று தனது
புண்பட்ட கையின்மீது குளிர்நீரை விட்டுக் கொண்டிருந்தார். நான் இங்கு மேசையில் அமர்ந்து,
தப்பிக்க ஏதேனும் வழி கிடைக்குமா என அலைந்து கொண்டிருக்கும் பொன்னிற பந்தை, அசெளகரியத்துடன்
கவனித்துக் கொண்டிருந்தேன்.
”அதாவது?” ஒருவழியாக
நான் பேச்சை துவங்கினேன்.
”சந்தேகமே இல்லை”.
லேப்ரின் அருகே வந்து என்னெதிரில் அமர்ந்தார். ”அது சுயமாக உருமாற்றம் அடைந்துள்ளது.
முதலில் வெளிவரும்போது நிச்சயமாக அதற்கு நச்சுமுட்கள் இருக்கவில்லை. உனக்கு தெரியுமா,
நல்ல விஷயம் என்னவென்றால் நான் எனது நோவா12 பாத்திரத்தை கவனமாகவே ஆற்றியுள்ளேன்.”
”என்ன சொல்கிறீர்கள்?”
”நான் இவற்றை உருவாக்கும்போதே
மலடாக்கிவிட்டேன் என்பதால், இவை இனவிருத்தி செய்ய இயலாது. இரண்டாம் தலைமுறை என ஒன்று
இருக்காது. இவை இறக்கையில், அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும்.”
”நீங்கள் இந்த
விஷயத்தை யோசித்தது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.”
”இப்படி செய்தால்…”
லேப்ரின் முனுமுனுத்தார். ”இப்படி செய்துபார்த்தால் என்ன நடக்கும் என யோசிக்கிறேன்
. . . ”
”என்ன?”
”அந்த பந்து, பாக் பூச்சி. உண்மையில் அதுவொரு சோதனைக்கருவி இல்லையா? நாம் அதை மீண்டும் இயந்திரத்தினுள்
இட்டு பார்க்கலாம், நமக்கு தெரிந்துவிடும். உனக்கு இதில் ஆர்வமிருக்கிறதா?”
”நீங்கள் என்ன
சொன்னாலும் சரி டாக்டர், முடிவுகள் உங்களை சார்ந்ததே. ஆனால் இதுகுறித்து நீங்கள் மிகைஎதிர்பார்ப்பு
கொள்ள வேண்டாம்.”
அவர் பழக்குடுவையை
கவனமாக கையில் எடுத்துக் கொண்டதும் நாங்கள் ஆழமான படிகள்வழி கீழிறங்கி நிலவறைக்குள்
சென்றோம். அவ்வறையின் மூலையில், சலவைத்தொட்டியினருகே வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய
தூண்வடிவ உலோகப்பொருள் ஒன்று துலங்கி வந்தது. ஒரு வினோதமான உணர்வு என்னை கடந்து சென்றது.
அதுதான் தக்கவைக்கும் இயந்திரம்.
”அப்படியெனில்
இதுதானா..”
”ஆம் இதுதான்”.
லேப்ரின் கட்டுப்பாட்டு அமைப்புகளை இயக்கி சிறிதுநேரம் ஏதோ வேலைசெய்தார். இறுதியாக
ஜாடியை எடுத்து இயந்திரத்தின் வாய்ப்பகுதியின்மேல் பிடித்து அதன் மூடியை கவனமாக திறந்தார். பாக் பூச்சி தயங்கியவாறே ஜாடியிலிருந்து இயந்திரத்தினுள் விழுந்தது. லேப்ரின் இயந்திரத்தின்
வாய்ப்பகுதியை மூடினார்.
”இதோ தொடங்கலாம்,”
அவர் ஓர் விசையை அழுத்தியவுடன் இயந்திரம் செயல்பட தொடங்கியது. நாங்கள் காத்திருந்தோம்.
வெளியே ஒளியின் இருப்பை முற்றிலும் விலக்கியவாறு இரவு அணைந்திருந்தது. இறுதியாக செயல்பாடு
முடிந்ததை அறிவிக்கும்விதமாக இயந்திரத்தின் விளக்கொளி எங்கள் முகத்தில் மின்னியது.
டாகடர் விசையை அணைத்தார், நாங்கள் இருவரும் அமைதியாக நின்றோம். அதை திறந்துபார்க்க
இருவருமே முன்வரவில்லை.
“சரி… நம்மில்
யாரிதை திறக்கப் போவது?” இறுதியாக நான் பேசினேன்.
லேப்ரின் தூண்டப்பெற்றார்.
இயந்திரத்தின் அருகே சென்று வெளியீட்டுப் பகுதியை திறந்தார். அவரது விரல்கள் ஒரு மெல்லிய
தாளை பிடித்தவாறு வெளிவந்தன, அதுவொரு இசைக்குறிப்பு. “இதுதான் முடிவு” அவர் அத்தாளை
என்னிடம் கொடுத்தார். ”நாம் மேலேசென்று இதை இசைத்துப் பார்க்கலாம்.”
நாங்கள் மீண்டும்
மேலே உள்ள இசையறைக்குத் திரும்பினோம். லேப்ரின் அங்கிருந்த ஒரு ஆடம்பரமான பியானோவின்
முன் அமர்ந்தார், நான் இசைக்குறிப்பை அவரிடம் தந்தேன். அத்தாளை திறந்துபார்த்து சற்றுநேரம்
பயின்றார், அவரது முகம் உணர்ச்சியற்றிருந்தது. பின்னர் இசைக்க ஆரம்பித்தார்.
நான் கேட்ட அந்த
இசை பயங்கரமாக இருந்தது. இதற்குமுன்னர் அதுமாதிரி எதையும் நான் கேட்டதில்லை. அது உருக்கொலைந்ததாகவும்
கொடூரமானதாகவும் மொத்தத்தில் அர்த்தமற்றதாக இருந்தது. அது ஒரு சமயத்தில் பாக் ஆலாபனையாக
இருந்தது என்பதை என்னால் மிகுந்த சிரமத்துடன்தான் நம்ப முடிந்தது – பாக் ஆலாபனை மிகுந்த
மதிப்புமிக்கதும் சீரான ஒழுங்கமைவு கொண்டதுமான படைப்பாகும்.
”எல்லாம் முடிந்தது,”
லேப்ரின் எழுந்து நின்றார். அந்த இசைக்குறிப்பை கையிலெடுத்து சுக்குநூறாக கிழித்தெறிந்தார்.
நாங்கள் கீழிறங்கிவந்து
எனது காரை நோக்கி செல்லும் பாதையில் நான் சொன்னேன், ”வேறெந்த மனித பண்புகளை காட்டிலும்
உயிர்பிழைத்தலுக்கான போராட்டம் மிக வலுவானது என நினைக்கிறேன். அதன்முன் நமது விளைமதிப்பற்ற
நெறிமுறைகளும் நடத்தைபண்புகளும் மிகச் சிறியதாக தோற்றமளிக்கின்றன.”
லேப்ரின் ஒப்புக்கொண்டார்.
“அப்படியெனில் அந்த நெறிமுறைகளையும் நடத்தைபண்புகளையும் காப்பாற்ற, நம்மால் எதுவும்
செய்ய இயலாது.”
”அதை காலம்தான்
தீர்மாணிக்கும்,” நான் சொன்னேன். ”இந்த செயல்முறை தொல்வியடைந்தாலும் ஒருவேளை வேறு ஏதேனும்
வேலை செய்யலாம்; இப்போது நம்மால் கணிக்கவோ முன்கூறவோ முடியாத ஏதோவொன்று, ஒருநாள் நமது
வழியில் எதிர்படலாம்.”
அவருக்கு இரவு
வணக்கம் சொல்லிவிட்டுவந்து எனது காரில் ஏறிக்கொண்ட்டேன். முழுவதுமாக இரவு அணைந்துவிட்டதால்
சூழ இருப்பது புலப்படாதவண்ணம் இருள் செறிந்திருந்தது. நான் முகப்பு விளக்கை உயிர்பெறச்
செய்து சாலையின் இருளுக்குள் காரை ஓட்டிச் சென்றேன். வேறெந்த காரும் சாலையில் தென்படவில்லை,
அந்த குளிர்மிகு இரவில் நான் தனியாக சென்று கொண்டிருந்தேன்.
சாலைவளைவில் கியரை
மாற்றுவதற்காக வேகத்தை குறைத்தேன். திடீரென சாலையோரமாக ஓர் நகர்வு தென்பட காரை நிறுத்தினேன்,
இருளுக்குள் அங்கிருந்த பெரும் காட்டத்தி13 மரத்தினடியில் ஏதோவொன்று இருப்பதாகப்
பட்டது. முகத்தை வெளியேநீட்டி அதைக்காண முயன்றேன்.
காட்டத்தி மரத்தினடியில்
ஒரு பெரிய பழுப்புநிற வண்டு எதையோ கட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது. வினோதமான புரிந்துகொள்ள
இயலாத வகையிலிருந்த அக்கட்டமைப்பில், களிமண் உருண்டை ஒன்றை அதன் இடத்தில் பொருத்திக்
கொண்டிருந்தது வண்டு. அதை குழப்பத்துடனும் ஆர்வத்துடனும் சிறிதுநேரம் நோக்கியிருந்தேன்.
இறுதியாக நான் கவனிப்பதை உணர்ந்ததும் அது தன் செயல்பாட்டை நிறுத்தியது. பின்னர் சட்டென
திரும்பி தன் கட்டிடத்தினுள் சென்று உறுதியாக கதவை சாத்திக் கொண்டது.
நான் விலகிச் சென்றேன்.
***
மொசார்ட்1
– Mozart (classical era) – செவ்வியல் இசைக்கலைஞர்
ப்ராம்ஸ்2
– Brahms (Romantic Period) – ஜெர்மானிய இசைக்கலைஞர்
ஸ்குபெர்ட்3
– Franz Schubert (Late Classical & Early Romantic) – ஆஸ்ட்ரிய இசைக்கலைஞர்
அகழெலி4 -
Mole
குவிண்டெட்5
– Quintet - ஐந்து நபர்கள் குழுவாக சேர்ந்து இசைக்கும் இசை
வாக்னர்7
– Richard Wagner (Opera) – ஜெர்மானிய இசைக்கலைஞர்
பாக்8 –
Bach (Boroque period) – ஜெர்மானிய இசைக்கலைஞர்
முன்னிசை மற்றும்
ஆலாபனை9 – Preludes and Fugues
ஸ்டார்வின்ஸ்கி10
– Igor Starvinsky (20th century) – ரஷ்ய இசைக்கலைஞர்
காஞ்சொறி11
– Nettle – தொட்டால் எரிச்சலூட்டுகிற ஒருவகைச் செடி
நோவா12 –
Noah – கிருஸ்துவ தொன்மங்களில் இடம்பெறும் கதாப்பாத்திரம்
காட்டத்தி13
– Sycamore Tree – பெரிய அத்தி இன மர வகை
***
மூலம்: The Preserving Machine (1953)
http://sickmyduck.narod.ru/pkd097-0.html
தமிழாக்கம்: தே.அ. பாரி
Comments
Post a Comment