கலைகுறித்த சொல்லாடல்களில் உதிர்க்கப்படும் பிரபலமான வாக்கியங்களுள் ஒன்று ‘கலை காலமற்றது’. இது உண்மைதானா? ஒருமுறை உயிர்கொண்டுவிட்ட கலைப்படைப்பு முடிவிலிவரை தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ளுமா என்ன? ஆம், ஒருவகையில் உண்மைதான். கம்பனும் வள்ளுவனும் நம் கணினிகளில் வந்தமர்ந்திருப்பது அவ்வாறே. வியாசன் மற்றும் வால்மீகியின் சொற்கள் தோன்றிய காலம் முதல் இன்றுவரை பாடப்படாத ஒருநாள்கூட இந்நிலத்தில் கடந்துசென்றிருக்காது. காத்திரமான கலைப்படைப்புகள் யாவும் நிச்சயம் காலம்கடந்து நிற்கும் என்பதை சிந்திக்கும் எவரும் உணரலாம். ஆனால் இந்த உண்மைமீது நமக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதில்லை. எங்கோ ஓர் மூலையில் நமது ஆழம் இதை சந்தேகித்தவாறே இருக்கிறது. காலன் எனும் விராடநாயகன்முன் நம் கலைப்படைப்புகள் எஞ்சுமா என்ற கேள்வி நம்மை எப்போதும் துரத்தி வருகிறது. எனவே எப்போதும் அனைத்தையும் ஆவணப்படுத்திக் கொண்டே இருக்கிறோம், அருங்காட்சியகங்கள் அமைக்கிறோம், தற்போது இணையம்வழியாக பெரும் திரட்டுகளை சேமித்து வைக்கிறோம். எனினும் அந்த ஆதி ஐயம் நீங்கிவிட்டதாகத் தெரியவில்லை. அது எப்போதும் நம்மில் இருந்து கொண்டிருக்கும் என்றே நினைக்கிற
மொழியாக்கப் பக்கம்