அஸ்பெஸ்டாஸ் மனிதன்
பிற எழுத்தாளர்கள்
மட்டும் நினைத்த மாத்திரத்தில் நானூறு அல்லது ஐநூறு ஆண்டுகள் உறக்கத்தில் ஆழ்ந்து,
பின்னர் தூரத்து எதிர்காலத்தில் விழித்தெழுந்து அவ்வுலகின் அற்புதங்களுக்கு சாட்சிகூறுவது
என்பது நியாயமற்றதாகப் பட்டது.
நானும் அதை செய்ய
விரும்பினேன்.
சமூக சிக்கல்கள்
குறித்து ஆராய்வதில் ஆர்வமுள்ள மாணவனாக நான் எப்போதுமே இருந்து வந்திருக்கிறேன், இப்போதும்
கூட. இன்றைய உலகின் உறுமும் இயந்திரங்கள், உழைக்கும் வர்க்கத்தின் முடிவில்லா துயரங்கள்,
பூசல்கள், வறுமை, போர்கள் மற்றும் அதன் கொடுமைகள் என இவையனைத்தும் என்னை மிரளச் செய்கின்றன.
துன்பங்களால் ஆற்றல்வற்றிப்போன மனிதகுலம் இயற்கையை முழுமையாக கைப்பற்றி, அமைதியின்
சகாப்தத்திற்குள் நுழையும் காலம் ஒருநாள் நிச்சயம் வரும் என்ற சிந்தனையை நான் விரும்புகிறேன்.
அந்நாளைக் காண
ஏங்குகிறேன்.
எனவே அதை வேண்டுமென்றே
ஒருங்கமைத்தேன்.
நான் விரும்பியதெல்லாம்
வழக்கமான முறையில் உறக்கத்தில் ஆழ்ந்து, குறைந்தது இருநூறு அல்லது முன்னூறு ஆண்டுகளுக்கு
பின்னர் விழித்தெழுந்து எதிர்கால உலகின் அற்புதங்கள்முன் நிற்க வேண்டும் என்பதே.
உறக்கத்திற்க்கான
தயாரிப்புகளைச் செய்தேன்.
என்னால் கண்டடையக்கூடிய
அனைத்து காமிக் பத்திரிக்கைகளையும் வாங்கினேன், ஓவியங்கள் நிறைந்தவற்றைக்கூட விட்டுவைக்கவில்லை.
அவற்றை விடுதியில் உள்ள என் அறைக்கு கொண்டு சென்றேன்: கூடவே வேகவைத்த பன்றியிறைச்சியையும்
நிறைய டோனட்களையும்1 எடுத்துச் சென்றிருந்தேன். அவற்றை சாப்பிட்டுவிட்டு
படுக்கையில் சாய்ந்தாவாறே ஒன்றன்பின் ஒன்றாக காமிக் பத்திரிக்கைகளை வாசித்தேன். இறுதியில்
மிக மோசமான மந்தநிலை என்னைத் தாக்குவதாக உணர்ந்த சமயத்தில், லண்டன் வீக்லி டைம்ஸை கைநீட்டி
எடுத்து அதன் தலையங்கப் பக்கத்தை கண்முன்னே விரித்துப் பிடித்தேன்.
அது ஒருவகையில்
தெளிவான நேரடித் தற்கொலைக்கு சமம், இருப்பினும் அதைச் செய்தேன்.
புலனுணர்வுகள்
எனைவிட்டு விலகத் தொடங்குவதை உணரமுடிந்தது. கூடத்தின் மறுபக்க அறையில் ஒருவன் பாடிக்
கொண்டிருந்தான். ஜன்னல்வழியே ஒலிமிக்கதாக கேட்டுக்கொண்டிருந்த அவனது குரல் மேலும் மேலும்
குறைந்தவாறே வந்தது. வெளியுலகின் இருப்பே தெரியாத அளவுக்கு நான் ஒரு ஆழமான, அளவிடமுடியாத
உறக்கத்தில் ஆழ்ந்தேன். நாட்களும், வருடங்களும், பின்னர் நூற்றாண்டுகளின் நீண்ட பயணங்களும்
மிகமெல்லிய உணர்வாக என்னைக் கடந்துசென்றன.
பின்னர் பொறுமையாக
நடப்பதுபோல் அல்லாமல், திடீரென விழித்தெழுந்தமர்ந்தேன்; எனைச் சுற்றிலும் நோக்கினேன்.
நான் எங்கிருக்கிறேன்?
என்னிடமே கேட்டுப்
பார்க்கலாம்.
நான் ஒரு அகலமான
சோபாவில் அமர்ந்திருப்பதை கண்டுகொண்டேன். நானிருந்த அப்பெரிய அறை மங்கலாகவும் புகைமூட்டமாகவும்
அதன் பொதுவான தோற்றத்தில் பாழடைந்ததாகவும் காணப்பட்டது. கண்ணாடி வைப்பறைகளையும் அதனுள்
இருந்த பதப்படுத்தப்பட்ட உருவங்களையும் காணும்போது அநேகமாக அது ஒருவகை அருங்காட்சியகமாக
இருக்க வேண்டும் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.
என்னருகில் ஒரு
மனிதன் அமர்ந்திருந்தார். அவரது முகம் ரோமங்களற்று இருந்தது, ஆனால் அதில் முதுமையோ
இளமையோ எதுவும் தென்படவில்லை. அவர் அணிந்திருந்த உடை, எரிந்த பின்பும் தனது வடிவத்தை
தக்கவைத்துக் கொண்ட காகிதச் சாம்பல்போல காட்சியளித்தது. அவர் என்னை அமைதியாக பார்த்துக்
கொண்டிருந்தார், அதில் குறிப்பிடத்தகுந்த வியப்போ அல்லது ஆர்வமோ இருக்கவில்லை.
”சீக்கிரம்,” தொடங்கும்
ஆவலில் நான் பேசினேன்; ”நான் எங்கிருக்கிறேன்? நீங்கள் யார்? இது என்ன வருடம்? இது
வருடம் 3000ஆ? அல்லது வேறென்ன வருடம்?”
அவர் மூச்சிழுத்தார்,
முகம் எரிச்சலின் பாவனையுடன் இருந்தது.
”உணர்ச்சிகரமான
உனது பேச்சுமுறை விந்தையாக இருக்கிறது,”
”சொல்லுங்கள்,”
நான் மீண்டும் கேட்டேன், “இது வருடம் 3000 தானே?”
”நீ என்ன கேட்க
வருகிறாய் என்பது எனக்குப் புரிகிறதென நினைக்கிறேன்,” அவர் தொடர்ந்தார்; ”ஆனால் உண்மையில்
அதுகுறித்த உத்தேசமான யோசனைகூட என்னிடமில்லை. நான் நினைக்கிறேன், குறைந்தபட்சம் அந்த
வருடமாகவோ அல்லது அதிலிருந்து நூற்று சொச்சம் வருடங்களுக்குள்ளாகவோதான் இருக்க வேண்டும்;
ஆனால் இதையெல்லாம் நீண்ட காலமாகவே எவரும் கணக்குவைத்துக் கொள்வதில்லை, சரியாக சொல்வது
கடினம்.”
“இதையெல்லாம் கணக்கு
வைத்துக் கொள்வதில்லையா?” நான் மூச்சுத்திணறினேன்.
”முன்னர் வைத்திருந்தோம்,
இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்புவரையிலும் கூட வருடங்களை கணக்கு வைத்துக் கொள்ள
முயலும் கணிசமான மக்கள் இருந்தனர், ஆனால் அதைப்போன்ற பல பழமையான வழக்கங்களுடன் சேர்ந்து
அதுவும் மறைந்துபோனது. ஏனெனில், “ முதன்முறையாக அவரது பேச்சில் ஒருவித உணர்ச்சிகரம்
தென்பட அவர் தொடர்ந்தார், “அதனால் என்ன பயன்? உனக்கு தெரியுமல்லவா, நாங்கள் இறப்பை
ஒழித்துவிட்ட பிறகு -”.
”இறப்பை ஒழித்துவிட்டீர்களா!”
நான் கத்தியவாறே நிமிர்ந்தமர்ந்தேன். ”அடக் கடவுளே!”
”நீ பயன்படுத்திய
அச்சொற்றொடர் என்ன?” அம்மனிதர் வினவினார்.
“அடக் கடவுளே!”
”ஆ, இதற்குமுன்னர்
இப்படி ஒன்றை கேட்டதேயில்லை. ஆனால் நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன் எனில் இறப்பு,
உணவு, மாற்றம் என அனைத்தையும் ஒழித்துவிட்ட பிறகு நடைமுறையில் நிகழ்வுகளிலிருந்தே நாங்கள்
விடுவிக்கப்பட்டுவிட்டோம், மேலும் --”.
”நிறுத்துங்கள்!”
எனது மூளை குழம்பியது. ”தயவுசெய்து ஒரு நேரத்தில் ஒன்றைமட்டும் சொல்லுங்கள்.”
அவரது முகத்தில்
திருப்தியின்மை தெரிந்தது. ”நீ நீண்ட காலமாக உறக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என
நினைக்கிறேன். சரி, அப்படியெனில் கேள்விகளை கேள். நீ தவறாக எடுத்துக் கொள்ளவில்லையெனில்,
முடிந்தளவு குறைவான கேள்விகளை மட்டும் கேள், மேலும் தயவுசெய்து ஆர்வமோ வியப்போ கொள்ளாதே.”
வினோதமான வகையில்
எனது நாவில் எழுந்த முதல் கேள்வி இதுதான் –
”இந்த உடைகள் எவற்றால்
ஆனது?”
”அஸ்பெஸ்டாஸ்”
அவர் பதிலளித்தார். ”இவை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நீடிக்கின்றன. நாங்கள் ஒவ்வொருவரும்
ஆளுக்கொன்று வைத்துள்ளோம். எவரேனும் புதிய உடுப்பு வேண்டுமென விரும்பினால், இவைபோக
கோடிக்கணக்கான உடுப்புகள் இருப்பிலும் உள்ளது.”
”நன்றி, சரி இப்பொழுது
நான் எங்கிருக்கிறேன் என சொல்லுங்கள்?”
“நீ இருப்பது ஒரு
அருங்காட்சியகத்தில். இங்கு காப்பறையினுள் உள்ள உருவங்களெல்லாம் உன்னைப்போன்ற மாதிரிகள்தான்.
ஆனால் இங்கு.., உனக்கு முற்றிலும் புதிதாக தெரியும் இக்காலகட்டம் குறித்து உண்மையில்
ஏதேனும் தெரிந்துகொள்ள விரும்பினால், நடைபாதைவழியாக வெளியேறி மையச்சாலைக்கு சென்று
அங்குள்ள சாலையோர இருக்கையில் அமர்ந்துகொள்ளலாம்.”
நாங்கள் நடக்க
துவங்கினோம்.
மங்கலான தூசுபடிந்த
கட்டிடங்களை நாங்கள் கடந்துசெல்கையில் காப்பறையினுள் இருந்த உருவங்களை ஆர்வத்துடன்
கவனித்தேன்.
நீல உடை அணிந்த
ஒரு உருவம் இடுப்பில் பட்டையுடனும் கையில் லத்தியுடனும் இருப்பதை பார்த்து நான் சொன்னேன்,
“இதுவொரு காவலதிகாரி!”
“உண்மையாகவா,”
எனது புதிய துணை கேட்டார், “இதுதான் காவலதிகாரி என்பதா? நான் அடிக்கடி ஆச்சரியப்படுவதுண்டு,
இவர்கள் எதற்காக பயன்பட்டார்கள் என?”
“எதற்கு பயன்பட்டார்களா?”
நான் குழப்பத்துடன் மீண்டும் சொன்னேன். “ஏன், அவர்கள் சாலையின் மூலையில் நிற்பார்கள்.”
”ஆ, ஆமாம், சரிதான்..,
மக்களை சுடுவதற்காக இல்லையா. நீ எனது அறியாமையை பொறுத்துக் கொள்ள வேண்டும்,” அவர் தொடர்ந்தார்,
“உங்கள் சில கடந்தகால சமூக சடங்குகள் குறித்து நான் அறியேன். எனது கல்வியை மேற்கொள்கையில்
சமூக வரலாறு தொடர்பான தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டன, ஆனால் அவர்கள் பயன்படுத்திய சரக்கு
மிகவும் தரமற்றது.”
அந்த மனிதர் என்ன
சொன்னார் என்பது எனக்கு துளிகூட புரியவில்லை, எனினும் அவரை கேள்விகேட்க நேரமில்லை,
நாங்கள் அச்சமயத்தில் வெளிச்சாலைக்கு வந்துவிட்டிருந்தோம். நான் ஆச்சரியத்தில் உறைந்து
நின்றேன்.
மையச்சாலை! இது
சாத்தியம்தானா? இந்த மாற்றம் எனை மிரளச் செய்கிறது. எனது நினைவில் உறுமும் வாகனநெரிசலுடன்
இருக்குமிடத்தில், இந்த பாசி படர்ந்த பாழடைந்த இடம்! பெரிய கட்டிடங்கள் யாவும் நூற்றாண்டுகளின்
காற்றாலும் தட்பவெட்பத்தின் தொடர் அழுத்தத்தாலும் சிதைவுற்றிருந்தன, அதன் பக்கங்கள்
பூஞ்சை மற்றும் பாசியின் வளர்ச்சியால் மூடப்பட்டிருந்தன! அவ்விடம் சப்தமற்றிருந்தது.
ஒரு வாகனமும் அசையவில்லை. தலைக்குமேல் செல்லும் மின்கம்பிகள் இல்லை, உயிர்களின் சப்தமோ
அசைவோ எங்குமில்லை, ஒன்றை தவிர்த்து - எனது துணையைப்போலவே அஸ்பெஸ்டாஸ் உடையணிந்த மனித
உருவங்கள் சிலர், பொறுமையாக இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு அதே ரோமங்களற்ற
முகங்களும், அதில் அதே எல்லையற்ற வயதின் தோற்றமும் இருந்தன.
நான் காணவிரும்பிய
மனித ஆதிக்கத்தின் பொற்காலம் என்பது இதுதானா! ஏனெனத் தெரியவில்லை, மனிதகுலம் முன்னோக்கி
செல்லவே விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை எவ்வித கேள்விகளுமில்லாமல் நான் எப்போதுமே
நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் நமது நாகரிகத்தின் சீரழிவு மற்றும் கைவிடப்படுதலின்
இச்சித்திரம் என்னைத் திகைக்கவைத்தது.
சாலையோரத்தில்
ஆங்காங்கே சில இருக்கைகள் இருந்தன, நாங்கள் அதில் அமர்ந்தோம்.
அஸ்பெஸ்டாஸ் மனிதன்
கேட்டார், “உன் நினைவில் இருக்கும் நாட்களிலிருந்து நன்றாகவே மேம்பட்டிருக்கிறது இல்லையா?”
அவரது பேச்சில்
பெருமிதம் தென்பட்டது.
நான் மூச்சுத்திணறியவாறே
ஒரு கேள்வி கேட்டேன்.
“டிராம் வண்டியும்
பிற வாகனங்களும் எங்கே?”
”ஓ, அவையெல்லாம்
காலாவதியாகி நீண்ட நாட்களாகிறது. அவை எத்தனை மோசமானதாக இருந்திருக்க வேண்டும், அதுவும்
அதன் இரைச்சலும்!” அவரது அசைவில் அஸ்பெஸ்டாஸ் உடை சலசலத்தது.
“ஆனால், பிறகெப்படி
பயணம் செய்வீர்கள்?”
“நாங்கள் பயணிப்பதில்லை,
ஏன் பயணிக்க வேண்டும்? இங்கிருப்பதோ அல்லது வேறெங்கேனும் இருப்பதோ எல்லாம் ஒன்றுதான்.”
முகத்தில் முடிவில்லாத சாரமின்மையுடன் என்னை பார்த்தார்.
என் மனதில் ஆயிரக்கணக்கான
கேள்விகள் முட்டிமோதின. அவற்றுள் எளிமையான ஒன்றை கேட்டேன்.
“நீங்கள் எவ்வாறு
வேலைக்கு சென்று திரும்புவீர்கள்?”
”வேலை!” அவர் சொன்னார்,
“வேலையென இனி எதுவுமில்லை. எல்லாம் முடிந்துவிட்டது. நூற்றாண்டுகளுக்கு முன்பே அதன்
இறுதிதுளிவரை நிறைவேற்றப்பட்டுவிட்டது”
வாயைத் திறந்தபடியே
அவரை சிறிதுநேரம் நோக்கிக்கொண்டிருந்தேன். பின்னர் திரும்பி, மீண்டும் அச்சாம்பல்நிற
பாழடைந்த சாலையை பார்த்தேன். அஸ்பெஸ்டாஸ் உருவங்கள் இங்குமங்கும் சென்று கொண்டிருந்தன.
புலன்களை கட்டுக்குள்
கொண்டுவர முயன்றேன். இதுவரை கனவு காணப்படாத இப்புதிய எதிர்காலத்தை புரிந்துகொள்ள வேண்டுமெனில்,
நான் இதை முறையாகவும் படிப்படியாகவும் அணுகவேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன்.
”ஓகோ”
சிறிது இடைவேளைக்கு பின்னர் பேச்சைத் தொடங்கினேன், ”முக்கியமான பணிகள் எனது காலத்திலிருந்தே
நடக்கத் துவங்கிவிட்டன. நான் இதைப்பற்றில்யெல்லாம் முறையாக கேள்விகேட்க அனுமதிப்பீர்கள்
என நினைக்கிறேன், பின்னர் படிப்படியாக எனக்கு விளக்கம் அளியுங்கள். முதலாவதாக, வேலைகளேயில்லை
என்பதன்மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?”
”ஏன்..,
அது தானாகவே இறந்துவிட்டது. இயந்திரங்கள் அதை இல்லாமலாக்கியது. ஒருவேளை என் நினைவு
சரியெனில் உங்கள் காலத்திலேயே குறிப்பிட்ட அளவு இயந்திரங்கள் இருந்தன. நீராவி உங்களால்
சிறப்பாக கையாளப்பட்டது, மின்சாரத்தில் நல்ல தொடக்கம் இருந்தது, ஆனால் கதிர்வீச்சு
ஆற்றல் அநேகமாக பயன்பாட்டுக்கு வந்திருக்கவில்லையென நினைக்கிறேன்.”
நான்
ஆமோதித்து தலையசைத்தேன்.
”ஆனால்
நீங்கள் கண்டுபிடித்தது எதுவும் உங்களுக்கு நன்மை செய்யவில்லை. எந்த அளவுக்கு உங்கள்
இயந்திரங்கள் சிறப்பாக இருந்தனவோ அந்த அளவுக்கு கடுமையாக உழைத்தீர்கள். அதிகமான பொருட்களை
அடைந்தவுடன் மேலும் அதே அளவுக்கு பொருட்களை வேண்டினீர்கள். வாழ்வின் வேகமோ மேலும் மேலும்
துரிதமானது. உங்கள் கூக்குரல்களால் அதை நிறுத்த இயலவில்லை. உங்கள் சொந்த இயந்திரத்தின்
பற்களிலேயே நீங்கள் அனைவரும் சிக்கிக் கொண்டீர்கள், எவராலும் இறுதியைக் காண இயலவில்லை.”
”அது
முற்றிலும் உண்மையே.., உங்களுக்கு இவையெல்லாம் எப்படித் தெரியும்?”
“ஓ,
எனது கல்வியின் அப்பகுதி சிறப்பாகவே உள்ளீடு செய்யப்பட்டுள்ளது –- நான் சொல்வது உனக்கு
புரியவில்லை என்பது தெரிகிறது. பரவாயில்லை விடு, அதுகுறித்து பின்னர் சொல்கிறேன். அதன்பிறகு
அநேகமாக உங்கள் காலத்திலிருந்து இருநூறு வருடங்கள் கழித்து வந்தது, இயற்கையை கைப்பற்றுதலின்
சகாப்தம், மனிதன் மற்றும் இயந்திரங்களின் இறுதி வெற்றி.”
”அவர்கள்
கைப்பற்றினார்களா?” நான் அவசரமாக கேட்டேன், பழைய நம்பிக்கைகள் எனது நரம்புகளில் மீண்டும்
உயிர்பெற்றன.
”கைப்பற்றினார்கள்,”
அவர் தொடர்ந்தார், ”அதனுடன் போராடி அதை முழுவதுமாக வென்றார்கள்! முன்னேற்றங்கள் ஒவ்வொன்றாக
வந்தன, பின்னர் வேகவேகமாக, நூறு வருடங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே முடிந்துவிட்டன.
இன்னும் சொல்லப்போனால் மனிதகுலம் எப்போது தனது விழைவுகளை அதிகரிப்பதற்கு பதிலாக தேவைகளை
குறைப்பதை நோக்கி ஆற்றலை செலுத்த ஆரம்பித்ததோ,
அப்போதே அனைத்தும் கைகூடத் தொடங்கின. இரசாயன உணவு முதலில் வந்தது. அற்புதம்! அதன் எளிமை.
உங்கள் காலத்தில் கோடிக்கணக்கான மக்கள் காலை முதல் இரவுவரை மண்ணை உழுதுகொண்டும் உரமிட்டுக்கொண்டும்
இருந்தனர். நான் அவர்களின் மாதிரிகளை கண்டுள்ளேன் –- ’விவாசாயிகள்’ எனக் குறிப்பிடுவார்கள்,
அருங்காட்சியகத்தில்கூட ஒரு மாதிரி உள்ளது. இரசாயன உணவின் கண்டுபிடிப்பிற்கு பின்னர்,
ஒரே வருடத்தில் நூற்றாண்டுகளுக்கு நீடிக்குமளவு உணவு உற்பத்தி செய்யப்பட்டு பெரும்பண்ட
கிடங்குகளில் குவிக்கப்பட்டது. விவசாயம் வழக்கொழிந்தது. உண்பது, ஊரக வேலை, வீட்டு வேலை
- அனைத்தும் முடிவுக்கு வந்தன. இப்போதெல்லாம் ஒருநபர், வருடத்திற்கொருமுறை ஒரு செறிவூட்டப்பட்ட
மாத்திரை எடுத்துக் கொள்வதோடு சரி. மொத்த செரிமான அமைப்பும் - பரிணாமத்தின் வழிவந்த
அதன் சிக்கலான அமைப்பை நீ அறிவாய் – பயனற்றுப் போனது!”
என்னால்
இடைமறிக்காமலிருக்க இயலவில்லை, “உங்களுக்கும் இந்த மக்களுக்கும்…, வயிற்றுப் பகுதியோ
செரிமான அமைப்போ இல்லையா?”
”அதெல்லாம்
இருக்கிறது, ஆனால் எங்களுக்கு அதன் பயன்பாடு வேறு. என்னுடையது பெரும்பாலும் எனது கல்வியால்
நிரப்பப்பட்டுள்ளது - மீண்டும் நீ கேள்வி கேட்பாய் என நினைக்கிறேன்! நான் இவ்வாறே தொடர்வது
நல்லது. இராசயன உணவு முதலில் வந்தது: அது கிட்டத்தட்ட மூன்றில் ஒருபங்கு வேலையை இல்லாமலாக்கியது,
அதன்பின்னர் வந்தன அஸ்பெஸ்டாஸ் உடைகள். மிகச்சிறப்பானது! ஒருவருடத்திலேயே மனிதகுலம்
தனக்குத் தேவையான எப்போதைக்குமான உடைகளை உற்பத்தி செய்துவிட்டது. நிச்சயமாக பெண்களின்
போராட்டமும் நாகரிக பாவனையின் வீழ்ச்சியும் இதனுடன் தொடர்புற்றதால் மட்டுமே இது சாத்தியமானது
எனலாம்.”
“நாகரிக
பாவனைகள் ஒழிந்து விட்டனவா,” நான் கேட்டேன், “அந்த அர்த்தமற்ற, ஊதாரித்தனமான வழக்கங்கள்,”
- ஆடம்பர உடைகளின் பயனின்மை குறித்த எனது பழைய வீராவேச பேச்சு ஒன்றை தொடங்க எத்தனித்தேன்.
அதற்குள் அஸ்பெஸ்டாஸ் உடைகளில் நகரும் உருவங்கள் கண்ணில் பட்டன, நான் நிறுத்திக் கொண்டேன்.
”எல்லாம்
ஒழிந்துவிட்டன” அஸ்பெஸ்டாஸ் மனிதன் சொன்னார். “அதன்பின்னர் நாங்கள் கொன்றது, அல்லது
நடைமுறையில் கொல்லப்பட்டது, பருவநிலை மாற்றங்கள். வானிலை என நீங்கள் குறிப்பிடும் பருவநிலை
மாற்றங்களால் ஏற்பட்ட வேலைகளின் அளவு குறித்த சரியான புரிதல் உங்களுக்கு `இருந்திருக்கவில்லை
என நினைக்கிறேன். அதுவே விசேஷ உடைகள், வீடுகள் மற்றும் காப்பிடங்களுக்கான தேவையை உருவாக்குகிறது,
மிகப்பெரும் வேலைப்பளு அது. உங்கள் காலத்தில் அது எவ்வளவு பயங்கரமாக இருந்திருக்க வேண்டும்,
காற்றும் புயலும், மாபெரும் ஈரத்திரள்கள் – அதை எவ்வாறு அழைப்பீர்கள்? - மேகங்கள்
– காற்றில் நகர்ந்து கொண்டிருக்கும், கடல் முழுக்க உப்பாகயிருக்கும் இல்லையா? – காற்றால்
அலைகழிக்கப்பட்டு, அனைத்தின்மீதும் பனி படர்ந்து, வெயில், மழை – எத்தனை மோசம்!”
”சில
சமயங்களில்.., அவை மிகவும் அழகானது. ஆனால் நீங்கள் எவ்வாறு அதை மாற்றி அமைத்தீர்கள்?”
”வானிலையைக்
கொன்றோம்!”
“மிக
எளிமையானது – அதன் பல்வேறு விசைகளை ஒன்றன்மீது ஒன்று மோதவிட்டோம், அது கடல்நீரின் உள்ளடக்கத்தை
மாற்றியமைத்து அதன் மேல்பரப்பு முழுவதும் வழவழப்புத்தன்மை கொண்டதாக ஆக்கியது. உண்மையில்
இதை என்னால் சரியாக விளக்க முடியாது, இது தொடர்பான உள்ளீட்டுத் தரவுகளை எனது கல்வியில்
எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இந்த மாற்றங்களே நீ காண்பதுபோல வானை சாம்பல் நிறமாகவும்
கடலை பசையின் நிறத்திலும் மாற்றியமைத்தது, வானிலை ஒரே மாதிரியானதாக ஆனது. அது எரிபொருள்
செலவையும், வீடுகளையும் அதனுடன் தொடர்புடைய முடிவில்லா வேலைகளையும் இல்லாமலாக்கியது!”
சற்று
இடைவேளை விட்டார். நான் கடந்துவந்திருக்கும் பரிணாமத்தின் வளர்ச்சிப் போக்கை புரிந்துகொள்ள
ஆயத்தமானேன்.
“எனில்,
இயற்கையை கைப்பற்றுதல் மூலம் தற்போது செய்வதற்கு எந்த வேலையும் மிச்சமில்லை என்று கூறலாமா?”
”அவ்வாறே,”
அவர் சொன்னார், ”ஒன்றும் மிச்சமில்லை.”
”அனைவருக்கும்
உணவிருக்கிறதா?”
“மிகுதியாகவே”
”வீடுகள் மற்றும் உடைகள்?”
”எல்லாம்
விரும்பிய அளவு,” அஸ்பெஸ்டாஸ் மனிதன் கையை அசைத்தவாறே சொன்னார். “அங்குள்ளது பார்,
சென்று எடுத்துக் கொள்ளலாம். ஆம், அவை குறைந்து கொண்டிருக்கின்றன – மெதுவாக, மிக மெதுவாக.
ஆனால் நூற்றாண்டுகளுக்கு அவை போதுமானது, யாரும் கவலைகொள்ளத் தேவையில்லை.”
அப்போதுதான்
முதன்முதலாக ஒன்றை உணர்த்தேன், பழைய வாழ்வில் வேலையின் அர்த்தம் என்னவென்றும், வாழ்வின்
இழைகள் எந்த அளவுக்கு வேலையை மேற்கொள்ளும் முனைப்பைச் சுற்றி பின்னப்பட்டிருந்தன என்றும்.
இப்போது
எனது கண்கள் மேல்நோக்கி பார்த்தன: ஒரு பாசிபடர்ந்த கட்டிடத்தின் உச்சியில் தொலைபேசி
கம்பிகளின் எச்சங்கள் தொங்கிக் கொண்டிருப்பதாகப் பட்டது.
”அவையெல்லாம்
என்னவாயின, தந்திகளும் தொலைபேசிகளும் மற்றும் தகவல்தொடர்பின் மொத்த அமைப்பும்?”
”ஆ,
அதைத்தான் தொலைபேசி என சொல்வீர்கள் இல்லையா? நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இவை பயன்பாட்டில்
இல்லை. சரியாக இவை எதற்கு பயன்பட்டன?”
”ஏன்,”
நான் உற்சாகத்துடன் சொல்ல ஆரம்பித்தேன், “தொலைபேசியைக் கொண்டு நாம் எவரையும் அழைத்துப்
பேசலாம், எத்தொலைவிலிருந்தாலும்.”
”அதுபோல
எவரும் எந்நேரத்தில் வேண்டுமானாலும் உங்களை அழைத்துப் பேசலாமா?” அஸ்பெஸ்டாஸ் மனிதன்
ஏதோ ஆபத்தான விஷயத்தை கேட்டதுபோல் திகிலடைந்தார். ”மிக மோசம்! உங்கள் காலம் நிச்சயமாக பயங்கரமானதாக இருந்திருக்க வேண்டும். தொலைபேசி மற்றும்
அதைப்போன்றவை, போக்குவரத்து, தொடர்புவசதிகள் என அனைத்தும் நிறுத்தப்பட்டு பின்னர் தடைசெய்யப்பட்டன.
அவை அர்த்தமற்றவை என்பதை நீயே பார்க்கலாம்,” அவர் தொடர்ந்தார், “உங்கள் காலத்திற்கு
பிறகு வந்த மக்கள் படிபடியாக அறிவுக்கு ஏற்புடையவர்களாக மாறினர் என்பதை நீ இன்னும்
உணரவில்லை. ரயில்பாதையை எடுத்துக் கொள், அதனால் என்ன பயன்? அது ஒவ்வொரு நகரத்திற்கும்
பிற நகரங்களிலிருந்து ஏராளமான மக்களை கொண்டுவந்தது. யார் கேட்டது அவர்களை? ஒருவருமல்ல.
எப்போது வேலை நின்றதோ வணிகமும் முடிவுக்கு வந்தது, உணவு தேவையற்றதானது, வானிலையும்
முடக்கப்பட்டுவிட்ட பிறகு பயணிப்பது என்பதே முட்டாள்த்தனமானது. எனவே அவை அனைத்தும்
நிறுத்துப்பட்டன. எப்படியிருந்தாலும்,” சட்டென ஐயத்தின் முகபாவனையுடன் குரல் மாறுபட
அவர் சொன்னார், “அது ஆபத்தானது!”
“ஆபத்தானதா!
உங்களுக்கு இன்னமும்கூட ஆபத்து உள்ளதா?”
”ஏன்,
இன்னமும் உள்ளது, உடைந்து போவதற்க்கான ஆபத்து எப்போதும் உள்ளது.”
”உடைந்து
போவதெனில்?”
”நீங்கள்
அதை இறப்புநிலை என்று சொல்வீர்களென நினைக்கிறேன். நிச்சயமாக, ஒருவகையில் கடந்த சில
நூற்றாண்டுகளாக இறப்பென்பதே இல்லை; நாங்கள் அதை ஒழித்துவிட்டோம். நோயும் இறப்பும் ஓர்
எளிமையான நோக்கில் கிருமிகளின் செயல்பாடே. அவற்றை ஒவ்வொன்றாக கண்டுபிடித்தோம். உங்கள்
காலத்திலேயேகூட ஒன்றிரண்டு எளிமையான கிருமிகளை கண்டுபிடித்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்,
குறிப்பாக பெரியனவற்றை?”
நான்
தலையசைத்தேன்.
”ஆம்,
டிப்தீரியாவும்2 டைபாய்டும் உங்களால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. மேலும்
நான் சொல்வது சரியெனில், சில முக்கியமான கிருமிகள் இருந்தன. உதாரணமாக, உங்களால் மிக
நுண்ணியவை எனக் கருதப்பட்ட ஸ்கார்லெட்3 காய்ச்சல் மற்றும் சின்னம்மை ஆகியற்றை
கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தீர்கள், பிறவற்றை குறித்தான யூகங்கள்கூட உங்களிடமில்லை.
நாங்கள் அவற்றை ஒவ்வொன்றாக வேட்டையாடி அழித்தோம். முதுமை என்பது ஒரு நோய்க்கிருமியின்
விளைவு மாத்திரமே என்ற சிந்தனை உங்கள் எவருக்கும் தோன்றியிருக்கவில்லை என்பது ஆச்சரியம்தான்!
கடைசியில் அது மிக எளிமையான ஒன்றாகவே இருந்தது, இருப்பினும் அதன் செயல்பாடுகள் மிகப்பரவலானது
என்பதால் நீங்கள் அதுகுறித்து யோசித்திருக்க வாய்ப்பில்லை.”
”அப்படியெனில்,
நீங்கள் சொல்ல வருவது,” பரவசத்தால் அஸ்பெஸ்டாஸ் மனிதனை நோக்கி அவசரமாக கேட்டேன், “இப்போதெல்லாம்
நீங்கள் என்றென்றைக்குமாக வாழ்கிறீர்களா என்ன?”
”உனக்கு
இந்த அசாதாரண, உணர்ச்சிகரமான பேச்சுமுறை இல்லாதிருக்க நான் வேண்டுகிறேன்; ஒவ்வொன்றும்
மகத்தான முக்கியத்துவம் கொண்டதுபோல் நீ பேசுகிறாய்.” அவர் தொடர்ந்தார், “ஆம், நாங்கள்
என்றென்றைக்குமாக வாழ்கிறோம், குறைந்தபட்சம் உடையாமலிருக்கும்வரையிலேனும். சிலசமயங்களில்
அவ்வாறு நடந்துவிடுகிறது. அதாவது நாங்கள் ஏதேனும் உயரமான இடத்திலிருந்து விழுந்தோ,
எதன்மீதாவது மோதியோ எதிர்பாரா வண்ணம் உடைந்துவிடுகிறோம். நாங்கள் இன்னமும் சற்றே சுலபமாய்
முறிந்துவிடக்கூடியவர்கள் என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும் – முதுமைக்கிருமியுடைய
மிச்சமாக இருக்கலாம் என நான் சந்தேகிக்கிறேன் – எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால் இம்மாதிரி விபத்துகள், நமது நாகரிகத்தின் மிக வேதனைக்குரிய கூறுகளில்
ஒன்று என சொல்வேன். எனவேதான் நாங்கள் விபத்துகளை தவிர்ப்பதற்க்கான நடவடிக்கைககளை எடுத்தோம்.
கார்கள், சாலை போக்குவரத்து, விமானங்கள் என அனைத்தும் தடை செய்யப்பட்டன. உங்கள் காலத்தின்
அபாயங்கள்,” அஸ்பெஸ்டாஸ் உடையின் நடுக்கத்துடன் அவர் சொன்னார், “நிச்சயம் மிக மோசமாக
இருந்திருக்க வேண்டும்.”
”ஆம்,
அவை மோசமானதே,” எனது தலைமுறையின் மீது இதுவரை உணர்ந்திராத ஒருபுதுவித பெருமிதத்துடன்
நான் பதிலளித்தேன், “ஆனாலும் நாங்கள் கருதியது என்னவெனில், துணிவுமிக்க மக்களின் கடமையின்
ஒரு பகுதியாக -”
“சரி,
சரி,” அஸ்பெஸ்டாஸ் மனிதன் பொறுமையின்மையுடன் இடைமறித்தார், “தயவுசெய்து உணர்ச்சிவசப்படாதே.
நீ என்ன சொல்ல வருகிறாயென எனக்குத் தெரியும். அது முற்றிலும் பகுத்தறிவுக்கு பொருந்தாதது.”
நாங்கள்
நீண்டநேரம் மெளனத்தில் அமர்ந்திருந்தோம். நான் என்னைச் சுற்றி இருக்கும் உதிரும் கட்டிடங்கள்,
மாற்றமில்லாத வானம், உள்ளீடற்ற வெறிச்சோடிய சாலை ஆகியவற்றை பார்த்தேன். இதோ, கைப்பற்றுதலின்
பரிசு, பசி மற்றும் குளிரின் முடிவு, கடுமையான போரட்டங்களின் நிறுத்தம், மாற்றம் மற்றும்
இறப்பின் வீழ்ச்சி, நான் எதிர்பார்த்த மகிழ்ச்சியின் பொற்காலம். எனினும், இவையனைத்திலும்
ஏதோ பிழையுள்ளதாக தெரிகிறது. நான் சிந்தித்தேன், பின்னர் பதிலுக்காக காத்திராமல் இரண்டு
மூன்று விரைவான கேள்விகளை கேட்டேன்.
”இப்போது
போர் ஏதேனும் உள்ளதா?”
”நூற்றாண்டுகளுக்கு
முன்பே எல்லாம் முடித்துவைக்கப்பட்டுவிட்டது. சர்வதேச பிரச்சனைகளை ஒரு காசுபோடும் இயந்திரம்5
வழியாக அவர்கள் தீர்வுக்கு கொண்டுவந்தனர். அதன்பின்னர் அனைத்து வெளியுறவு விவகாரங்களும்
கைவிடப்பட்டன. அதனால் என்ன பயன்? ஒவ்வொருவருமே பிறநாட்டவரை மோசம் என்றே என்ணுகின்றனர்.”
”இப்போது
செய்தித்தாள்கள் வருகின்றனவா?”
”செய்தித்தாள்கள்!
அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது? வேண்டுமெனில் ஆயிரக்கணக்கில் அவை குவித்து
வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அதில் என்ன உள்ளது; வழக்கமாக நடக்கும் அதே விஷயங்கள்..,
போர்கள், விபத்துகள், வேலை மற்றும் இறப்பு. இவை சென்றவுடன் செதித்தாள்களும் சென்றுவிட்டன.
இதை கவனி, “ அவர் தொடர்ந்தார், “நீ ஒரு சமூக சீர்திருத்தவாதியாக இருந்திருப்பாய் என
நினைக்கிறேன், எனினும் இந்த புதிய வாழ்க்கையை நீ புரிந்துகொண்டது போலவேத் தெரியவில்லை.
உங்கள் சுமைகள் யாவும் முற்றிலுமாக மறைந்துவிட்டன என்பதை நீ உணரவேண்டும். இப்படி யோசித்துப்
பார். நீங்கள் உங்கள் இளமைக்காலத்தை எப்படி கழிப்பீர்கள்?”
”ஏன்,
கிட்டத்தட்ட முதல் பதினைந்து வருடங்களை கல்விக்காக செலவிடுவோம்.”
”ஆம்,
இப்போது இதில் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்பதை நீயே கவனிக்கலாம். இன்றைய
உலகில் அறுவைசிகிழ்ச்சை மூலம் கல்வியளிக்கப்படுகிறது. கல்வியளிப்பதை இவ்வளவு எளிமையான
செயல்பாட்டின் மூலம் நிறைவேற்றிவிடலாம் என்பதை உங்கள் காலத்தில் எவரும் உணராமல்போனது
விந்தைதான். உண்மையில் நீங்கள் செய்துகொண்டிருந்தது என்னவெனில் மூளையின் உட்பகுதியை
மெதுவாக வளைத்து மறு உருவாக்கம் செய்யும் ஒரு நீண்ட வலிமிக்க மனச்செயல்பாடு. அதை நீங்கள்
அறிந்திருக்கவில்லை. கற்பவை அனைத்தும் ஒரு புறவயமான மாற்றமாகவே மூளையில் மீட்டுருவாக்கம்
கொள்கிறது. நீங்கள் அதை அறிவீர்கள், ஆனால் அதன் முழுமையான விளைவுகளை கண்டிருக்கவில்லை.
அடுத்து வந்ததுதான் அறுவைசிகிழ்ச்சை கல்வி – மண்டையின் பக்கவாட்டை திறந்து அதனுள் ஒரு
முன்தயாரிக்கப்பட்ட மூளையின் பகுதியை பொருத்தும் எளிமையான செயல். முதலில் இறந்தவர்களின் மூளைதான் இதற்கு பயன்படுத்தப்பட்டது
என நினைக்கிறேன், வேறுவழியும் இருக்கவில்லை. அது அருவருப்பானது” – அஸ்பெஸ்டாஸ் மனிதன்
ஒரு முதிர்ந்த இலையைப்போல நடுங்கினார் – ”ஆனால் விரைவிலேயே அவர்கள் வார்ப்புகளை உருவாக்க
கற்றுக்கொண்டனர், அது சிறப்பாகவே வேலை செய்தது. அதன்பின்னர் அது ஒரு விஷயமே அல்ல. கவிதைகளையோ
அல்லது அந்நிய மொழிகளையோ அல்லது வரலாற்றையோ அல்லது ஒருவர் விரும்பும் வேறு எதை வேண்டுமானாலும்
உள்ளீடு செய்வதற்கு சிலநிமிட அறுவைசிகிழ்ச்சையே போதுமானதாக ஆகியது. உதாரணமாக இதைப்பார்,”
பக்கவாட்டில் இருந்த முடியை பின்தள்ளி அதனடியில் ஒரு வடுவை காண்பித்தார், “இது எனது
கோள முக்கோணவியலை4 உள்ளீடு செய்ததன் அடையாளம். அது சற்றே வலி தருவதாய் இருந்தது
என்பதை ஒப்புக் கொள்கிறேன், ஆனால் பிற விஷயங்கள், உதாரணமாக ஆங்கில கவிதைகள் அல்லது
வரலாறு போன்றவற்றை குறைந்தபட்ச வேதனைகூட இல்லாமல் உள்ளீடு செய்துவிடலாம். இந்நிலையில்,
உங்களுடைய வலிமிகுந்த காட்டுமிராண்டித்தனமான செவிவழி பயிலும் கல்விமுறை குறித்து யோசித்துப்
பார்க்கவே நான் நடுங்குகிறேன்.
வினோதமான
வகையில், மேன்மையான பல விஷயங்களுக்கு மண்டையை பயன்படுத்தவே தேவையில்லை என்பதை ரொம்ப
பிந்தியே கண்டுகொண்டோம். நாங்கள் அவற்றை – தத்துவம், மீபொருண்மை.., இதுபோன்றவை – முன்பு செரிமான அமைப்பாக இருந்த இடத்தில்
அடைத்து வைத்துள்ளோம். அவை அவ்விடத்தை நன்றாகவே நிரப்புகின்றன.”
அவர்
சற்றே இடைவெளிவிட்டு தொடர்ந்தார்:
”சரி
தொடர்வோம், கல்விக்குப் பின் உங்கள் நேரத்தையும் உழைப்பையும் எடுத்துக்கொண்டது என்ன?”
”நிச்சயமாக
ஒருவன் வேலைக்கு செல்ல வேண்டும், அதன்பின்னர்… உண்மையை சொல்ல வேண்டுமெனில், ஒருவனுடைய
வாழ்வில் பெரும்பகுதி நேரமும் உணர்வும் எதிர்பாலினத்தை நோக்கியே அர்ப்பணிக்கப்படும்.
காதலில் விழுவதும், வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளும்வகையில் ஏதேனும் பெண்ணை கண்டடைவதுமே
ஒருவனின் பிரதான செயல்பாடு.”
“ஆ,”
உண்மையான ஆர்வத்துடன் அஸ்பெஸ்டாஸ் மனிதன் தொடங்கினார். ”பெண்களுடனான உங்கள் ஏற்பாடுகள்
குறித்து கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் எப்போதுமே அவை புரிந்ததில்லை. சொல்; நீ ஒரு பெண்ணை
தேர்ந்தெடுத்ததாகச் சொன்னாய்?”
“ஆம்.”
”பின்னர்
நீங்கள் குறிப்பிடும்படி அவள் உன் மனைவி ஆகிவிடுவாள்?”
”ஆம்,
இயல்பாகவே.”
”இப்போது
நீ அவளுக்காக பணிகள் செய்வாய்?” அஸ்பெஸ்டாஸ் மனிதன் மலைப்புடன் கேட்டார்.
”ஆம்.”
”அவள்
வேலைக்கு செல்ல மாட்டாள்?”
”இல்லை,
பொதுவாக செல்ல மாட்டாள்.”
”மேலும்
நீ ஈட்டுவதில் பாதி அவளுடையது?”
”ஆம்.”
”இதுபோக
உனது வீட்டில் வாழவும் உடைமைகளை பயன்படுத்திக் கொள்ளவும் அவளுக்கு உரிமை உள்ளது?”
“நிச்சயமாக,” நான் பதிலளித்தேன்.
”எவ்வளவு
பயங்கரமானது! உங்கள் காலத்தின் கொடுமைகளை நான் இதுவரை உணர்ந்திருக்கவில்லை.”
அவர்
முன்னர் கொண்டிருந்த அதே அச்சப்படும் முகபாவனையுடன் சற்றே நடுங்கியவாறு அமர்ந்திருந்தார்.
பின்னர்தான்
எனக்கு திடீரென உறைத்தது, சாலையில் செல்லும் உருவங்கள் யாவும் ஒரேமாதிரி இருந்தன.
“இதைச்
சொல்லுங்கள், இப்போது பெண்களே இல்லையா? அவர்களும் ஒழிந்துவிட்டார்களா?”
”ஓ,
இல்லையில்லை, அவர்கள் எப்போதும்போலவே உள்ளனர். நீ காணும் அவர்களுள் சிலர் பெண்களே.
இப்போது அனைத்துமே மாறிவிட்டது என்பதை மட்டும் நீ தெரிந்துகொள்ள வேண்டும். எல்லாம்
அவர்களின் பெரும் போராட்டத்தின் விளைவாக வந்தவை, ஆண்களைப் போன்று இருக்க வேண்டும் என்ற
அவர்களின் விருப்பம். அது உங்கள் காலத்திலேயே தொடங்கிவிட்டதா?”
”சிறிய
அளவில் மட்டும். வாக்குரிமை, சமத்துவம் ஆகியவற்றை கேட்கத் தொடங்கியிருந்தனர்.”
”உங்கள்
பெண்கள் கொஞ்சம் மோசமனவர்களாக இருந்திருக்க வேண்டும், அப்படித்தானே? இறகுகளையும் தோலையும்
திகைப்பூட்டும் வண்ணங்கள் கொண்ட இறந்த பொருட்களையும் உடல்முழுக்க சூடிக்கொண்டு? அவர்கள்
தங்கள் முட்டாள்த்தனமான பற்களை காட்டி சிரித்தார்கள் இல்லையா, மேலும் எந்த நேரத்திலும்
உங்களை ஏமாற்றி அந்த ஒப்பந்தங்களுள் ஒன்றில் சிக்கவைத்து விடுவார்கள்?”
அவர்
நடுங்கினார்.
”அஸ்பெஸ்டாஸ்!”
(அவரை அழைக்க வேறு பெயரெதுவும் எனக்கு தெரிந்திருக்கவில்லை) கோபத்துடன் அவரை நோக்கி
திரும்பினேன், “அஸ்பெஸ்டாஸ், இதோ சாலையில் செல்லும் இச்சாம்பல்நிற-பீப்பாய் உடைகள்
அணிந்த உங்கள் வெற்று இணைகளை, விடுவிக்கப்படாத, சீர்திருத்தப்படாத இறை உருவாக்கமான
எங்கள் இருபதாம் நூற்றாண்டு வெள்ளந்தி பெண்களோடு ஒரு கணமேனும் ஒப்பிட முடியுமா?”
பின்னர்
திடீரென என் மனதில் வேறொரு சிந்தனை தோன்றியது —
”குழந்தைகள்,”
நான் கேட்டேன், “குழந்தைகள் எங்கே? அப்படி எவரேனும் உள்ளனரா?”
”குழந்தைகளா,
இல்லை! குறைந்தபட்சம் ஒரு நூற்றாண்டாகவே அப்படி எதையும் நான் கேள்வியுறவில்லை. அவர்கள்
எரிச்சலூட்டும் குட்டிச்சாத்தான்களாக இருந்திருக்க வேண்டும்! பெரிய முகங்களுடனும்,
எப்போதும் அழுதவாறு! மேலும் அவர்கள் வளர்ந்தனர் இல்லையா? பூஞ்சைகளைப் போல! அவர்கள்
ஒவ்வொரு வருடமும் சென்ற வருடத்தைக் காட்டிலும் நீண்டிருந்தனர், இதுபோக –”
“அஸ்பெஸ்டாஸ்!”
நான் எழுந்து நின்றேன். ”எனில், இதுதான் உங்கள் எதிர்கால நாகரிகம், உங்கள் பொற்காலம்.
வாழ்விலிருந்த வேலைகளும் சுமைகளும் அதன் அனைத்து மகிழ்ச்சியுடனும் இனிமையுடனும் சென்றுவிட்ட
பிறகு மிச்சமிருப்பது இந்த சோம்பலான இறந்த ஒன்று. பழைய போராட்டங்களினிடத்தில் வெறும்
தேக்கம், ஆபத்தும் இறப்பும் இருந்த இடத்தில் பாதுகாப்பின் சோர்வுறச் செய்யும் சலிப்பு,
மேலும் முடிவில்லா சிதைவுறுதலின் பேரச்சம்! எனக்கு திருப்பி கொடுங்கள்,” நான் கத்தியவாறே
சலனமற்ற காற்றில் எனது கைகளை அசைத்தேன், “பழைய வாழ்வின் ஆபத்துகள், அழுத்தங்கள், அதன்
கஷ்டங்களுடன் கசப்பான வாய்ப்புகள், மேலும் அதன் அதிர்ச்சிகள்.. நான் அவற்றின் மதிப்பை
தெரிந்துகொண்டேன்! அதன் முக்கியத்துவத்தை அறிகிறேன்! தயவுசெய்து எனக்கு ஓய்வளிக்க வேண்டாம்,”
நான் சத்தமாக கதறினேன் –
.
. . . . . . .
”சரி,
கூடத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு கொஞ்சம் ஓய்வளி!” ஒரு சத்தமான குரல் என் கனவுநிலையில்
குறுக்கிட்டது.
சட்டென
தூக்கம் பறிபோனது.
நான்
மீண்டும் எனது விடுதியறையில் விடப்பட்டேன், ஓய்வற்ற பழைய உலகின் கொடுமையான ரீங்காரம்
எனை தாக்கியது. கூடத்திலிருந்து ஒரு கோபமான மனிதனின் ஒலிமிக்ககுரல் செவிகளில் விழுந்தது,
”உன் நாராசத்தை நிறுத்து, உளறும் பிசாசே,” அவர் குறிப்பிட்டார். “பூமிக்கு திரும்பு.”
நான்
திரும்பினேன்.
***
டோனட்1
– Doughnut – கொழுப்பில் வழுக்கியெடுத்த இனிப்பு கலந்த மாவு
டிப்தீரியா2
– Diptheria – தொண்டை அழற்சி நோய்
ஸ்கார்லெட்
காய்ச்சல்3 – Scarlet Fever – கருஞ்சிவப்பு காய்ச்சல்
கோள
முக்கோணவியலை4 – Spherical Trignomentry
காசுபோடும்
இயந்திரம்5 – Slot Machine
***
பதிப்பித்த வருடம்: 1911
மூலம்: Nonsense novels தொகுப்பின் அனைத்து கதைகளும் இங்குள்ளது,
தமிழாக்கம்: தே.அ. பாரி
மிக சிறந்த படைப்பு. இதில் காட்டப்பட்டுள்ள எதிர்கால நிகழ்வை பார்க்கையில், நிகழ்காலத்தில் ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று சிந்திக்க வைக்கிறது.
ReplyDeleteKudos!