Skip to main content

இங்கிலாதிருத்தல் - மொழியாக்க அனுபவம்


விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் 2019 ஊட்டி காவிய முகாமை ஒட்டி நான் யதேச்சையாக மொழியாக்கம் செய்து பார்த்தது டெட் சியாங்கின் ‘The Great Silence’ சிறுகதை. சொற்கள் ஒவ்வொன்றாக இணைந்து முதல் வாக்கியங்கள் உருக்கொண்டதன் நிறைவை இப்போதும் உணர்கிறேன். அவை சிறப்பாக அமையவேண்டும் என்பதுகூட அல்ல, வெறுமனே முழுமையான வடிவத்திற்குள் ஒன்றை கொண்டு வரும் செயல்பாடே அப்போது நிறைவளிப்பதாய் இருந்தது. அதைத் தொடர்ந்து மேலும் சில கதைகளை மொழியாக்கம் செய்ய வேண்டும் என எண்ணினேன். ஆனால் எனக்கே என்மீது ஐயமும் இருந்தது, செய்வேனா என்று. எனவே பத்து வாரங்களில் பத்து கதைகள் என இலக்கு நிர்ணயித்துக் கொண்டேன். இலக்கிய செயல்பாடுகளை பொருத்தவரை காலம் மற்றும் அளவு குறித்த தெளிவான இலக்குகளை கொண்டிருத்தல் மிகுந்த பயனளிப்பதை உணர்கிறேன் (Inspired By சுனீல் அண்ணனின் வாசிப்பு சவால்:)). தற்போது சற்று தாமதாகவேனும் பத்துக் கதைகளை முடிக்க இயன்றிருக்கிறது. இப்பதிவின் மூலம் அச்செயல்பாட்டில் அடைந்த அனுபவத்தை தொகுத்துக் கொள்ள முயல்கிறேன். மொழியாக்கம் அனுபவம் எனக்கு இரண்டு வகைகளில் பயனளித்தது. முதலாவதாக படைப்பை அனுகி அறியும் அனுபவம். இரண்டாவது மொழி அனுபவம்.

படைப்பில் வாழ்தல்:

மொழியாக்கம் செய்வது என்பது நிச்சயமாக ஒரு படைப்பை அனுக்கமாக அறிய உதவும். கவிதை, சிறுகதை, நாவல் என அனைத்து வடிவங்களுமே வாசகனிடம் அடிப்படையில் கோரி நிற்பது அவனது கவனத்தையே. ஒரு கதையை ஏற்பதற்கோ நிராகரிப்பதற்கோ முன்னர் அதன் அனைத்து வாசிப்பு சாத்தியங்களும், நுட்பங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதா என்பதே அது முன்வைக்கும் ஒரே நிபந்தனை. இதை சரியாக செய்து முடிக்க நாம் அக்கதைக்குள் ‘வாழும்’ அனுபவத்தை நிச்சயம் அடைந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் அதற்கு முயன்றிருக்க வேண்டும். ஒரு நல்ல வாசகர் இயல்பாகவே இதை சிறப்பாக செய்துவிடலாம். ஆனால் சிறுகதைகளை பொறுத்தவரை அதன் அளவு காரணமாகவே சிலசமயம் அதற்கான போதிய கவனத்தையும் காலத்தையும் பெறாமல் போய்விடுகிறதோ என அவ்வப்போது எனக்கு தோன்றுவதுண்டு. பிடித்த கதைகளை மொழியாக்கம் செய்வதன் வாயிலாக நான் முதன்மையாகப் பெற்றது என்னவெனில், அக்கதையில் மேலும் சிறிதுகாலம் வாழும் அனுபவத்தையே. மொழியாக்கம் செய்கையில் மூலத்தின் ஒவ்வொரு சொல்லும் நம் கண்ணுக்கு படுகிறது, அனைத்துமே கவனம் பெறுகின்றன. காட்சிகள் மேலும் துலங்குகின்றன. வாசகனின் கோணத்திலிருந்து ஆசிரியனின் கோணத்திற்கு நம் பார்வை திரும்புகிறது. அதாவது வாசிக்கையில் ஒரு கதையை வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கும் அனுபவம் கிடைத்தது என்றால், மொழியாக்கம் செய்கையிலோ கதைக்குள் இருக்கும் அனுபவத்தைப் பெறுகிறோம். நிச்சயம் முந்தையதை காட்டிலும் செறிவான அனுபவமாகவே இதை உணர்கிறேன்.

இலக்கியம் வாசிக்கப்படுவதற்கு முதன்மையான காரணங்களுள் ஒன்றாக அடிக்கடி சொல்லப்படுவது ‘பிறிதொரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தல்’. ஆங்கிலக் கதைகளின் மொழியாக்கம் என்பது ஒருவகையில் எனக்கு பரவசம் அளித்தது இந்த அம்சத்தினால்தான். முற்றிலுமாக இங்கிலாதிருத்தல். அதிலும் அறிவியல் புனைவு மற்றும் மிகைகற்பனை கதைகள் எனும்போது மேலும் புதிய உலகங்களுக்குச் செல்கிறோம். கற்பனையானவை என்பதாலேயே மேலும் செறிவானவை, சிலசமயம் மேலும் பொருள் கொண்டவை. மானுட உணர்வுகளே எங்கும் விசாரிக்கப்படுகின்றன, ஆனால் வேறொரு நிலத்தில், வேறொரு ஒளியில். நான் எதிர்பார்த்தது போலவே இக்கதைகள் என்னை நிகழ் உலகின் சலிப்பிலிருந்து மீட்டன. ’முழுக் கோடையும் ஒரே நாளில்’ , ‘நிலவின் தொலைவு’ போன்ற கதைகளை மொழியாக்கம் செய்த நாட்கள் மிகவும் இனியவை. வெளியே மே மாத வெயில் தகித்து கொண்டிருந்த போதும் உள்ளுக்குள் சூரியனுக்காக மனம் ஏங்கிக் கொண்டிருந்ததை ஒருபோதும் மறக்க இயலாது (All summer in a Day). இவை ஒருவகை என்றால் ‘முட்டாள் கிம்பெல்’ போன்ற கதைகள் அளித்த தரிசனம் மேலும் நிறைவளிப்பது. அக்கதை நிகழும் நிலமும் எனக்கு முற்றிலும் அன்னியமானதே. ஆனால் களங்கமின்மையின் மகத்துவத்தை அதன் விடுதலையை அப்படைப்பின் மூலம் அடைந்தேன்.


சொல்லின் விசை:

இரண்டாவதாக மொழி அனுபவத்தைக் குறித்து சொல்ல வேண்டும். இது ஒரு வாசகனாக நான் அதிகம் உணர்ந்திராதது. ஆனால் எதையேனும் கொஞ்சமாக எழுதுபவர்கள்கூட உணரக்கூடியது. சொற்களை சரியான வகையில் பொருள் கொள்வதும், உரிய சொற்களை தேடுவதும், புதிய சொற்களை கண்டடைவதும் என இதில் அனைத்துமே ஆர்வமூட்டுபவை. இருப்பினும் சில சமயங்களில் சவாலானதும் கூட. ஒரு சொல்லே கூட ஒருமணிநேரம் எடுத்துக் கொண்டுவிடும். ஒன்றை செய்து முடிப்பதன் நிறைவை அளிப்பதே இத்தகைய சவால்கள்தான். யோசித்துப் பார்க்கையில் சற்றேனும் சவால்மிகுந்த வேலைகளே நமக்கு நிறைவளிக்கின்றன, மற்ற வேலைகளை வெறுமனே நாம் கடந்து செல்கிறோம் அவ்வளவுதான். சொற்றொடர்களை அமைப்பது ஓர் இன்பமெனில் அதை பிழை நோக்குவதும் மேம்படுவதும் மேலுமொரு உற்சாகமான செயல். ஒவ்வொருநாள் பிரதியை எடுத்துப் பார்க்கையிலும் திருத்தங்கள் கண்ணுக்கு தென்பட்டுக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு பிழையையும் சரி செய்யும்போதோ அல்லது உரிய மாற்றுசொல் அமைக்கும் போதோ பிரதி மேம்படுவதாகத் தோன்றும். திருத்தங்கள் முடிவில்லாதவை என்பதால் பிரதியும் முடிவில்லாமல் மேம்படுவதாய் உளமயக்கு எழும். முடிவிலாமல் மேம்படும் பிரதி எத்தனை சிறப்பாக இருக்க வேண்டும்! (முடிவிலாத பிழைகள் கொண்ட பிரதியே முடிவிலாமல் மேம்பட இயலும் என்ற தர்க்கத்தை ஒதுக்கி வைப்போமாக).

தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் வாசிக்கையில் உணர்ச்சிகரமான நீண்ட தன்னுரைகளும் விவாதங்களும் சுசீலா அம்மாவின் .மொழியாக்கத்தில் எவ்வாறு சாத்தியமாயின எனும் வியப்பை ஒவ்வொரு முறையும் அடைகிறேன். அத்தகைய பெரும் மொழியாக்க சாதனைகள் தற்போது எனக்கு மலைப்பையே அளிக்கின்றன. நான் செய்தவை எளிய சிறுகதைகள், அவற்றையும் தற்போது திரும்பிப் பார்க்கையில் எனக்கே சில திருத்தங்கள் தென்படுகின்றன. மொழி அனுபவத்தை பொருத்தவரை இன்னும் நான் கற்க வேண்டியதும் பயிற்சி எடுக்க வேண்டியதும் நிறைய இருப்பதை உணர்கிறேன். எவ்வாறிருபினும் மொழியில் திளைப்பதன் இன்பம் அலாதியானது. மொழியாக்க அனுபவத்திற்கு பின் எனக்கு ஏற்பட்ட புரிதல் ஒன்றுண்டு. ஒரு படைப்பாளியை செலுத்துவது படைப்பின் விசையே என நான் நம்பியிருந்தேன், தற்போது அதுமட்டுமல்ல எனத் தோன்றுகிறது. படைப்புக்கு நிகராகவே அதை சொல்லாக்குவதில் அடையும் மொழி அனுபவமும் இணையான விசையாக இருக்க வேண்டும்.

துணை நின்றவர்கள்:

’மாப்ள, நமக்கு கொண்டாட்டமா இருக்றத செஞ்சுகிட்டே இருக்கனும்.. ஒருநாள் அது மத்தவங்களுக்கு கொண்டாட்டமா மாறும்’ ஜெ தளத்தில் வெளியான ஒவ்வொரு கதையின் போதும் காலை ஒன்பது மணிக்கே போன் செய்து இம்மாதிரி உற்சாகமான வரிகளை அள்ளி வீசுபவர் நமது கோபி அண்ணன் ‘உயிர் நலத்தை நாடும்’ – சக்திவேல். துவக்க கதைகளுக்குப் பின் இச்செயல்பாட்டை தொடர்ந்தமைக்கு இவர் ஒரு முக்கிய காரணம். ‘மாப்ள.. விட்றாத மாப்ள.. பத்தையும் செஞ்சுடு’ என்றுதான் எப்போதும் பேச ஆரம்பிப்பார். கிட்டத்தட்ட இதுவரை வெளிவந்துள்ள அனைத்து கதைகள் குறித்துமே அவராக அழைத்துப் பேசியுள்ளார். தன்னைக் கவர்ந்த இடங்கள், விமர்சனங்கள் என இரண்டையுமே விரிவாகக் குறிப்பிடுவார். முதலிரு கதைகளுக்குப் பின் முதல் பிரதியை மணவாளனுடன் சேர்த்து இவருக்கும் அனுப்ப ஆரம்பித்தேன். அனுப்பிய நான்கு மணிநேரத்திற்குள் அவர் பரிந்துரைக்கும் திருத்தங்களை விரிவாக பிரதியிலேயே குறிப்பிட்டு அனுப்பிவிடுவார். எவ்வித எதிர்பார்ப்புமின்றி ரசனை மற்றும் இலக்கியத்தின் பொருட்டு இவர் காட்டும் உற்சாகம் மிகுந்த உத்வேகமளிப்பது.

அனைத்து மொழியாக்கங்களுக்கும் தவறாமல் அழைத்துப் பேசும் இன்னொரு நபர் அந்தியூர் மணி அண்ணன். கதை குறித்த தன் வாசிப்பை பகிர்ந்து கொள்வார். ஒருமுறை மொழியாக்கம் குறித்து ”அப்டியே தமிழ்ல வாசிக்கிற மாதிரியே இருந்துச்சு தம்பி” என்றார். ‘அண்ணா தமிழ்ல தான்னா மொழி பெயர்த்திருக்கேன்…” , “அதான் தம்பி தமிழ்ல வாசிச்சா எப்டி இருக்குமோ அப்டி” என்றார். சரி ரொம்ப பேசினால் அடுத்த கதையையும் தமிழிலேயே மொழிபெயர்க்க சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் ஒருவழியாக சமாளித்தேன். மணவாளன் அனைத்திலும் உடனிருப்பவன். அனைத்து கதைகளிலுமே பிழைநோக்கி செம்மை செய்ததில் அவன் பங்குண்டு. தினமும் மாலை நடையின்போது அவனுடன் மொழியாக்கத்திற்கான சொற்களை விவாதிப்பது ஒரு நல்ல பொழுதுபோக்கு (கிராமபோன் கிராமபோனாகவே இருக்கட்டுமா அல்லது இசைத்தட்டுப் பெட்டியா (அய்யே)). ஈரோடு கிருஷ்ணன் சார் தளத்தில் வந்த அனைத்து கதைகளையும் தவறாமல் படித்து விடுவார். வாரம் ஒருமுறையேனும் சந்திக்க நேர்கையில் கடைசியாக படித்த கதை குறித்த தன் கருத்தை சொல்வார். குறிப்பிடத்தகுந்த கதையெனில் அதுகுறித்து பேசும் முதல்நபர் அவராகத்தான் இருக்கும். அதேபோல் கதை மற்றும் மொழியாக்க சொற்தேர்வு குறித்த விமர்சனங்களையும் அவர் சொல்லத் தவறியதில்லை. பொதுவாக மொழியாக்கம் குறித்து நான் உரையாடும் இன்னொரு நபர் கோவை தாமரைக்கண்ணன். அவரும் இதே காலகட்டத்தில் ஓர் ஆங்கில நூலை தொகுத்து எழுத முயற்சித்து தற்போது கிட்டத்தட்ட முழுமையான மொழியாக்கமாகவே செய்து வருகிறார். ‘Philosophy of Science’ என்ற ஆக்ஸ்போர்டு வெளியீட்டு நூல். விரைவில் அவர் தன் மொழியாக்கத்தை பகிர்வார் என எதிர்பார்க்கலாம்.

இதுபோக எப்போதும் என் நன்றிக்கும் வணக்கத்திற்கு உரியவர் கதைகளை தன் தளத்தில் வெளியிட்ட ஆசிரியர் ஜெ. எம். எஸ். அவர்களின் மொழியாக்கம் தொடர்பாக ‘கனவுகளின் மாற்றுமதிப்பு’ என்ற கட்டுரையில் அவர் எழுதிய வரிகளே இச்செயல்பாட்டின் பெறுமதியை எனக்கு காட்டின,

//ஆம், மொழியாக்கம் என்ற செயல் ஒரு மகத்தான விஷயத்தை அடையாளம் காட்டுகிறது. மனிதகுலம் என்பது ஒற்றைப்பேரகம் கொண்டது என்பதை! //

அந்த ஒற்றைப்பேரகத்தை கண்டுகொள்வதன் ஆச்சரியத்தை மீண்டும் மீண்டும் அடைய வேண்டும். மேலும் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஆசிரியர் ஜெயமோகனுக்கு வணக்கம். சொல்லின் தேவிக்கு வணக்கம்.

***

அனைத்து கதைகளுக்குமான சுட்டி இங்கே.


Comments

Popular posts from this blog

பிறப்பிடம் - யசுனாரி கவபத்தா

பிறப்பிடம் அந்த எழுத்தர் வாடகைக்கு வீடு தேடி வந்தபோது பனிரெண்டு அல்லது பதிமூன்று வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் கதவினருகே நின்றிருப்பதைக் கண்டு அவரால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ”ரொம்பவும் சாமர்த்தியமாக நடந்து கொள்வதாக எண்ணாதே. உன் அம்மாவுக்கு கடிதமெழுதி அவளிடம் இதுபற்றி கேள்.” ”என் அம்மாவிடம் கேட்டால், அவள் இல்லையென்றே சொல்வாள். நீங்கள் என்னிடமிருந்துதான் வாடகைக்கு எடுக்க வேண்டும்.” ”சரி, வாடகை எவ்வளவு?” ”ஐந்து யென்.” ”ஹ்ம்ம. எனக்கு சந்தை நிலவரம் தெரியும்,” எழுத்தர் கறாராக மறுப்பதான தொனியில் பேசினார். “ஐந்து யென் என்பது ரொம்ப அதிகம். மூன்று யென்னாக வைத்துக் கொள்.” ”அவ்வாறெனில் மறந்து விடுங்கள்.” பையனைப் பார்க்கையில் வீட்டின் பின்னால் இருக்கும் வயல்வெளிக்கு ஓடத் தயாராக இருப்பவன்போல தெரிந்தது. இந்த குழந்தைத்தனமான பேரம்பேசும் பாணி எழுத்தரை திணறடித்தது. மாவட்ட அலுவலக கட்டிடத்தின் எதிரே உள்ள இவ்வீடு அவருக்கு கண்டிப்பாக வேண்டும். ”இந்த மாதம் மட்டும் நீங்கள் வாடகையை முன்பணமாக கொடுக்க வேண்டும்.” “நான் உன்னிடமே கொடுப்பதா?” ”ஆம், என்னிடம்தான்.” அ

முட்டாள் கிம்பெல் - ஐசக் பாஷவிஸ் சிங்கர்

முட்டாள் கிம்பெல் [I] நான்தான் முட்டாள் கிம்பெல். நான் என்னை முட்டாளாக நினைக்கவில்லை. ஆனால் மக்கள் என்னை அழைப்பது அவ்வாறுதான். பள்ளியில் இருக்கும்போதே எனக்கு அப்பெயரை அளித்துவிட்டனர். மொத்தம் எனக்கு ஏழு பெயர்கள் இருந்தன: க்ராக்கு, கழுதை, சணல்மண்டையன், லாகிரி, சிடுமூஞ்சி, மடையன் மற்றும் முட்டாள். இறுதிப் பெயர் நிலைத்துவிட்டது. என் முட்டாள்தனம் என்னவாக இருந்தது? என்னை எவரும் எளிதில் நம்பவைத்து விடலாம். அவர்கள் சொன்னார்கள், ”கிம்பெல், ரப்பியின் 1 மனைவியை ஈற்றறைக்குக் கொண்டுவந்துள்ளனர், செய்தி தெரியுமா?” எனவே நான் பள்ளிக்குச் செல்லவில்லை. கடைசியில் அதுவொரு பொய் என்று ஆனது. நான் எப்படி அறிந்திருக்க முடியும்? அவள் வயிறு பெரிதாக இருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவள் வயிற்றை ஒருபோதும் நான் நோக்கியதில்லையே. இதெல்லாம் பெரிய முட்டாள்தனமா என்ன? அந்த கும்பல் பலமாக என்னை கேலிசெய்து சிரித்து ஆடிப்பாடிவிட்டு ஓர் இரவு வணக்கப் பாடலை பாடியது. மேலும் வழக்கமாக ஒரு பெண் ஈற்றறைக்குச் செல்கையில் அவர்கள் அளிக்கும் உலர் திராட்சைகளுக்குப் பதிலாக என் கைநிறைய ஆட்டுப் புழுக்கைகளை திணித்தனர். நான