Skip to main content

பிரபஞ்ச மெளனம் - டெட் சியாங்


பிரபஞ்ச மெளனம்


மனிதர்கள் புவிக்கப்பாலான உயிரினங்களின் இருப்பை கண்டறிய அரெசிபோவை1 பயன்படுத்துகின்றனர். தொடர்பு வைத்துக் கொள்வதற்கான அவர்களின் விழைவு மிகவும் வலுவானது. எனவே அண்டம் முழுக்க கேட்கும் திறனுள்ள செவியை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஆனால் நானும் எனது கிளிக் கூட்டமும் இங்கேயே இருக்கிறோம். எங்கள் குரல்களை கேட்பதற்கு அவர்கள் ஆர்வம் காட்டாதது ஏன்?

மனிதரல்லாத உயிரனமான நாங்கள், அவர்களுடன் தொடர்புகொள்ளும் திறனுடையவர்கள். மிகச்சரியாக மனிதர்கள் தேடிக்கொண்டிருப்பது எங்களைத்தான் அல்லவா?

இந்த பிரபஞ்சம் மிக விரிந்தது. எனவே சிந்திக்கும் உயிரினம் நிச்சயம் இங்கு பலமுறை தோன்றியிருக்க வேண்டும். இந்த பிரபஞ்சம் மிக நீண்ட வயதுடையதும் கூட. எனவே தொழில்நுட்ப வசதி வாய்த்த ஒரு உயிரினத்துக்காவது அனைத்து விண்மீன் பேரடைகளுக்கும் (கேலக்ஸிகளுக்கும்) விரிவடையும் அளவுக்கு காலம் இருந்திருக்கும். இருப்பினும் பூமியைத் தவிர வேறெங்கும் உயிர்கள் இருப்பதற்கான குறிகள் இல்லை. மனிதர்கள் இதை ஃபெர்மி முரண்பாடு என்கின்றனர்.

ஃபெர்மி முரண்பாடுக்கு2 அளிக்கப்படும் ஒரு விளக்கம் என்னவென்றால், சிந்திக்கும் உயிரினங்கள் தாங்கள் பிற உயிரினங்களின் ஊடுறுவலுக்கு இலக்காகலாம் என அஞ்சி தங்கள் இருப்பை வெளித் தெரியாதவாறு அவர்களே மறைத்துக் கொண்டிருக்கலாம் என்பது.

மனிதர்களால் முற்றழிவின் விளிம்புவரை தள்ளப்பட்டுவிட்ட உயிர்னங்களின் ஒரு உறுப்பினராக நான் உறுதிகூறுவது என்னவென்றால் இது மிகவும் விவேகமான தந்திரமேயாகும்.

கவனம் ஈர்ப்பதை தவிர்த்து அமைதியாக இருப்பதே சரியான முடிவாகப் படுகிறது.

ஃபெர்மி முரண்பாடு சிலசமயம் ‘பெரும் மெளனம்’ என்று அறியப்படுகிறது. இந்த பிரபஞ்சம் பல்வேறு குரல்களின் கூச்சல் தொகுப்பாக இருந்திருக்க வேண்டும். மாறாக அது குழப்பமான அமைதியை மட்டுமே கொண்டுள்ளது.

சில மனிதர்கள் முன்வைக்கும் கோட்பாடு என்னவென்றால் சிந்திக்கும் உயிர்கள் வேற்றுக் கிரகத்திற்கு விரிவடையும் சாத்தியம் உருவாகும் முன்னரே அந்த உயிர்கள் முற்றழிந்திருக்கக் கூடும் என்பது. அவர்கள் சொல்வது சரியெனில், நாம் பார்க்கும் இந்த இரவு வானின் நிசப்தம் என்பது ஒரு கல்லறையின் அமைதி.

நூற்றாண்டுகளுக்கு முன்பு ரியோ அபஜோ3 வனம் முழுக்க எங்கள் குரல்களால் அதிரும் அளவுக்கு நாங்கள் மிகுதியாக இருந்தோம். நாங்கள் இப்போது கிட்டத்தட்ட இல்லாமலாகிவிட்டோம். விரைவிலேயே இந்த மழைக்காடும் பிரபஞ்ச வெளியைப் போலவே அமைதி கொண்டுவிடக் கூடும்.

அலெக்ஸ் என்ற பெயரில் ஆப்ரிக்க சாம்பல்நிற கிளி ஒன்று முன்பிருந்தது. அவனது அறிவு சாத்தியங்களுக்காக அவன் புகழ் பெற்றிருந்தான். அதாவது, மனிதர்களிடயே.

ஐரீன் பெப்பர்பெர்க் எனும் மனித ஆராய்ச்சியாளர் அலெக்ஸை ஆராய  முப்பதாண்டுகள் செலவிட்டார். அவர் ஒன்றை கண்டுபிடித்தார்: அலெக்ஸ் உருவங்களுக்கும் வண்ணங்களுக்குமான சொற்களை மட்டும் தெரிந்து கொண்டிருக்கவில்லை, அவன் உண்மையில் உருவம் மற்றும் வண்ணம் எனும் கருத்துகளை புரிந்து கொண்டிருந்தான்.

பல அறிவியாலளர்கள் ஒரு பறவை இதுபோன்ற கருத்துகளை புரிந்து கொள்ள முடியுமா என சந்தேகித்தனர். மனிதர்கள் தாங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என சிந்திக்க விரும்புகிறார்கள். ஆனால் அலெக்ஸ் வெறுமனே வார்த்தைகளை திருப்பி சொல்லவில்லை, அவன் தான் என்ன சொல்கிறோம் என்பதை புரிந்தே சொல்கிறான் என பெப்பர்பெர்க் அவர்களை ஒருவழியாக ஏற்றுக் கொள்ள வைத்தார்.

எனது உறவினர்களிலேயே அலெக்ஸ் மட்டும்தான் மனிதர்களின் பொருட்படுத்தும்படியான உரையாடல் துணையாக ஏற்றுக் கொள்வதற்கு மிக அருகில் வந்தவன்.

அலெக்ஸ் திடீரென இறந்த போனான், ஒப்புநோக்க அவன் ஓரளவு இளமையில் இருக்கும்போதே. இறப்பதற்கு முன்பு அன்று மாலை அலெக்ஸ் பெப்பர்பெர்கிடம் சொன்னது, “நீ நலமாக இரு. நான் உன்னை நேசிக்கிறேன்.”

மனிதர்கள் மனிதரல்லாத உயிரனத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாக இருந்தால், இதற்குமேல் அவர்கள் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

ஒவ்வொரு கிளியும் ஒரு தனித்தன்மையான சமிக்ஞை கொண்டு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்; உயிரியலாளர்கள் இதை கிளியின் ‘தொடர்பு சமிக்ஞை’ எனக் கூறுகின்றனர்.

1974 இல், வானியலாலர்கள் அரெசிபோவை பயன்படுத்தி மனிதர்களின் இருப்பை உணர்த்தும் வகையில் விண்வெளி நோக்கி ஒரு செய்தியை ஒளிபரப்பினர். அது மனித குலத்தின் தொடர்பு சமிக்ஞை.

வனத்தில் கிளிகள் பெயரைக் கொண்டே ஒன்றையொன்று அழைத்துக் கொள்ளும். ஒரு பறவை பிற பறவையின் தொடர்பு சமிக்ஞையை போலி செய்வதன் மூலமே அதன் கவனத்தை ஈர்க்கும்.

என்றேனும் ஒருநாள் அரெசிபோ வழியாக செய்தி திரும்பி பூமிக்கு அனுப்பப்படுவதை மனிதர்கள் கண்டுபிடித்தால், பிற எவரோ மனிதர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார்கள் என்பது உறுதியாகும்.

கிளிகள் குரல்வழி கற்பவர்கள்: நாங்கள் ஒரு ஒலியை கேட்ட பிறகு அதைக் கொண்டு புதிய ஒலியை எழுப்ப முடியும். இது சில விலங்குகளே கொண்டிருக்கும் திறன். ஒரு நாய் பத்திற்கும் மேற்பட்ட கட்டளைகளை புரிந்து கொண்டு செயலாற்றலாம். ஆனால் அது ஒருபோதும் குரைப்பதைத் தவிர வேறொன்றும் செய்யாது.

மனிதர்களும் குரல்வழி கற்பவர்கள் தான். நம்மிடையே அந்த ஒற்றுமை இருக்கிறது. எனவே மனிதர்களுக்கும் கிளிகளுக்கும் ஒலியுடன் ஒரு விசேஷ உறவு இருக்கிறது. நாம் வெறுமனே கத்துவதில்லை. நாம் உச்சரிக்கிறோம். நாம் தெளிவாக பேசுகிறோம்.

அதனால்தான் மனிதர்கள் அரெசிபோவை அதன் வடிவில் வடிவமைத்திருக்கிறார்கள். ஒரு ஒலிவாங்கி (ரிசீவர்) ஒலிகடத்தியாக (ட்ரான்ஸ்மிட்டர்) இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அரெசிபோ இரண்டாகவும் இருக்கிறது. அது கேட்பதற்கான காது, அதேசமயம் பேசுவதற்கான வாயும் கூட.

மனிதர்கள் கிளிகளுடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உடன் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் வெகு சமீப காலமாகத்தான் எங்களுக்கும் அறிவுத்திறன் இருக்கக் கூடும் எனும் சாத்தியத்தை பொருட்படுத்துகிறார்கள்.

நான் இதற்காக அவர்களை குறை சொல்ல முடியாது என நினைக்கிறேன். கிளிகளாகிய நாங்களும் மனிதர்கள் அவ்வளவு அறிவானவர்கள் அல்ல என்றே எண்ணி வந்தோம். நம்மிலிருந்து பெரிதும் மாறுபட்டவர்களின் சுபாவங்களை புரிந்து கொள்வது கடினமானதுதான்.

ஆனால் கிளிகள் வேறெந்த வேற்றுக் கிரக உயிரினத்தை காட்டிலும் மனிதர்களின் இயல்புகளுடன் ஒத்துப் போவது, மனிதர்கள் இன்னும் அருகில் வந்து எங்களை கவனிக்கலாம்; அவர்கள் எங்கள் கண்களை நேருக்குநேர் நோக்கலாம். வேற்றுக் கிரக உயிர்களை பொறுத்தவரை நூறு ஒலியாண்டுகள் தொலைவுக்கு இப்பால் இருந்து கொண்டு ஒட்டுகேட்க மட்டுமே முடியும் எனும் போது அவர்களை தங்களால் புரிந்து கொள்ள முடியும் என மனிதர்கள் எப்படி நம்புகிறார்கள்?

ஆங்கிலத்தில் ”ஆஸ்பிரேசன்” (Aspiration) என்ற சொல்லுக்கு எதிர்பார்ப்பு என்றும் சுவாசிக்கும் செயல் என்றும் இரண்டு அர்த்தங்கள் இருப்பது தற்செயலானதல்ல.

நாம் பேசும் போது நமது நுரையீரலின் மூச்சுக் காற்றை பயன்படுத்தி நமது எண்ணங்களுக்கு புறவடிவம் கொடுக்கிறோம். நாம் எழுப்பும் ஒலிகள் ஒரே நேரத்தில் நமது நோக்கங்களாகவும் நமது உயிர்விசையாகவும் இருக்கிறது.

நான் பேசுகிறேன், எனவே நான் இருக்கிறேன். மனிதர்கள் மற்றும் கிளிகள் போன்ற குரல்வழி கற்பவர்களால் மட்டுமே அனேகமாக இந்த உண்மையை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.

வாயைக் கொண்டு ஒலியை சமைப்பதில் ஒரு நிறைவு இருக்கிறது. இந்த செயல் மிக முதன்மையானதகவும் உள்ளார்ந்ததாகவும் மனித வரலாறு முழுக்க இருந்துள்ளது. எந்த அளவுக்கென்றால் மனிதர்கள் இந்த செயலை இறைவழி சேர்க்கும் பாதையாகக் கண்டுள்ளனர்.

பிதகோரியன் இறை உணர்வாளர்கள் உயிரெழுத்துகளை கோளத்தின் இசை வடிவம் என நம்பியதால் அவற்றை உச்சாடனம் செய்து அதிலிருந்து ஆற்றல் பெற்றனர்.

பெந்தகொஸ்தெ கிருஸ்தவர்கள் தாங்கள் நாவால் பேசும் போது, விண்ணில் உள்ள தேவதைகளின் மொழியை பேசுவதாக நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

இந்து பிராமணர்கள் தாங்கள் மந்திரங்கள் ஓதுவதன் மூலம் மெய்மையின் கட்டுமானத்தை பலப்படுத்துவதாக நம்புகிறார்கள்.

குரல்வழி கற்றல் திறன் கொண்ட ஒரு உயிரினம் மட்டுமே தங்கள் தொன்மங்களில் ஒலிக்கு இத்தனை முக்கியத்துவம் தர முடியும். கிளிகளாகிய நாங்கள் இதை வரவேற்கிறோம்.

இந்து தொன்மத்தின்படி பிரபஞ்சமானது ஒரு ஒலியால் உருவானது: “ஓம்”. இதுவரை இருந்ததும் இனி வரப்போவதுமான அனைத்தும் இந்த சொல்லில் அடங்கியுள்ளது.

அரெசிபோ தொலைநோக்கியை கொண்டு வானில் விண்மீன்களுக்கிடையே நோக்கும்போது மெல்லிய ஹம் ஒலியை அது கேட்கிறது.

வானியலாளர்கள் அதை “அண்டத்தின் நுண்ணலைப் பின்னனி” எனச் சொல்கின்றனர். பதினான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட, பிரபஞ்சம் உருவாக காரணமான பெரு வெடிப்பின் போது உண்டான அதிர்வலைகளின் எச்சமே அது என்கின்றனர்.

ஆனால் நாம் அதை ஆதி “ஓம்” ஒலியின் மெலிதான ஒலித்தீற்றலாகக் கேட்கக்கூடிய எதிரொலியாகக் கூட யோசித்துப் பார்க்கலாம். அந்த ஆதி ஒலியானது இந்த பிரபஞ்சம் உள்ளவரை இரவு வானில் அதிர்ந்து கொண்டிருக்கும் அளவுக்கு ஒத்திசைவானது.

அரெசிபோ வேறெதையும் கேட்காதிருக்கும் போது படைப்பின் குரலை கேட்டுக் கொண்டிருக்கிறது.

பியூர்டோ ரிகான்4 கிளிகளாகிய எங்களுக்கென்று சொந்த புராணங்கள் உள்ளது. அவை மனித புராணங்களை காட்டிலும் எளிமையானதுதான், இருப்பினும் மனிதர்கள் அதிலிருந்து மகிழ்ச்சி அடைவார்கள் என்றே நினைக்கிறேன்.

ஐயோ, எங்கள் புராணங்கள் எங்கள் இறப்போடு இழக்கப்படுகின்றன! நாங்கள் அழிவதற்கு முன்னர் மனிதர்கள் எங்கள் மொழியை புரிந்து கொள்வார்கள் என நான் நம்பவில்லை.

எனவே எங்கள் இனத்தின் முற்றழிவென்பது வெறும் ஒரு பறவை கூட்டத்தின் அழிவல்ல. அது எங்கள் மொழியின், எங்கள் சடங்குகளின், எங்கள் மரபின் மறைவும் கூட. அது எங்கள் குரலை முற்றிலும் கேட்காமலாக்குவது.

மனித நடவடிக்கை எங்கள் இனத்தை முற்றழிவின் விளிம்புவரை கொண்டு வந்திருக்கிறது, ஆனால் அதற்காக நான் அவர்களை குறை சொல்லவில்லை. அவர்கள் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் இதை செய்யவில்லை. அவர்கள் எங்கள்மேல் கவனம் செலுத்தவில்லை, அவ்வளவுதான்.

மேலும் மனிதர்கள் எத்தனை அழகான புரணங்களை உருவாக்குகின்றனர்; அவர்களின் கற்பனை வளம்தான் என்ன! அவர்களின் விழைவுகள் இத்தனை தீவிரமாக இருப்பது அதனால்தான் போலும். அரெசிபோவை பாருங்கள். அப்படியொரு பொருளை கட்டமைக்கக் கூடிய எந்த உயிரினமும் தன்னுள் மேன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

அனேகமாக எங்கள் உயிரினம் இங்கு இன்னும் நீண்டநாள் இருக்காது; நாங்கள் பெரும்பாலும் எங்கள் காலத்துக்கு முன்னரே இறந்து பிரபஞ்சத்தின் மெளனத்தோடு இணைந்து விடுவோம். ஆனால் நாங்கள் செல்வதற்கு முன்னர், மனிதகுலத்திற்கு ஒரு செய்தி அனுப்புகிறோம். அரெசிபோவில் உள்ள தொலைநோக்கி மூலம் அவர்களால் இதை கேட்க முடியும் என்று மட்டும் நம்புகிறோம்.

அந்த செய்தி இதுதான்:

நீங்கள் நலமாக இருங்கள். நான் உங்களை நேசிக்கிறேன்.

X

***
அரெசிபோ1 - Arecibo - பியூர்டோ ரிகோவின் அரெசிபோ நகராட்சியில் அமைந்துள்ள ஒரு ரேடியோ தொலைநோக்கி ஆய்வுமையம்
ஃபெர்மி முரண்பாடு2 - Fermi Paradox

ரியோ அபஜோ3 - Rio Abajo – பனாமா நகரின் ஒரு உட்பிரிவு

பியூர்டோ ரிகான்4 – Puerto Rico – வடகிழக்கு கரீபியன் கடலில் அமைந்துள்ள ஒரு பகுதி. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

***

மூலம்: The great silence - Ted Chiang (2016)


தமிழாக்கம்: தே.அ. பாரி

Comments

Popular posts from this blog

பிறப்பிடம் - யசுனாரி கவபத்தா

பிறப்பிடம் அந்த எழுத்தர் வாடகைக்கு வீடு தேடி வந்தபோது பனிரெண்டு அல்லது பதிமூன்று வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் கதவினருகே நின்றிருப்பதைக் கண்டு அவரால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ”ரொம்பவும் சாமர்த்தியமாக நடந்து கொள்வதாக எண்ணாதே. உன் அம்மாவுக்கு கடிதமெழுதி அவளிடம் இதுபற்றி கேள்.” ”என் அம்மாவிடம் கேட்டால், அவள் இல்லையென்றே சொல்வாள். நீங்கள் என்னிடமிருந்துதான் வாடகைக்கு எடுக்க வேண்டும்.” ”சரி, வாடகை எவ்வளவு?” ”ஐந்து யென்.” ”ஹ்ம்ம. எனக்கு சந்தை நிலவரம் தெரியும்,” எழுத்தர் கறாராக மறுப்பதான தொனியில் பேசினார். “ஐந்து யென் என்பது ரொம்ப அதிகம். மூன்று யென்னாக வைத்துக் கொள்.” ”அவ்வாறெனில் மறந்து விடுங்கள்.” பையனைப் பார்க்கையில் வீட்டின் பின்னால் இருக்கும் வயல்வெளிக்கு ஓடத் தயாராக இருப்பவன்போல தெரிந்தது. இந்த குழந்தைத்தனமான பேரம்பேசும் பாணி எழுத்தரை திணறடித்தது. மாவட்ட அலுவலக கட்டிடத்தின் எதிரே உள்ள இவ்வீடு அவருக்கு கண்டிப்பாக வேண்டும். ”இந்த மாதம் மட்டும் நீங்கள் வாடகையை முன்பணமாக கொடுக்க வேண்டும்.” “நான் உன்னிடமே கொடுப்பதா?” ”ஆம், என்னிடம்தான்.” அ

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் - ஐசக் பாஷவிஸ் சிங்கர்

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் நாகரிகத்திலிருந்து தப்பிப்பது என்ற எனது செயல்திட்டத்தை அச்சொல்லின் பொருளைக் கற்றுக்கொண்ட சிறிது காலத்திலேயே தொடங்கிவிட்டேன். ஆனால் பதினெட்டு வயதுவரை நான் வாழ்ந்துவந்த பில்கோரே கிராமமோ தப்பித்து ஓடிவரும் அளவுக்கு போதுமான நாகரிகத்தைக் கொண்டிருக்கவில்லை. பின்னாட்களில் நான் வார்சாவுக்குச் (போலாந்தின் தலைநகர்) சென்றபோது மீண்டும் பில்கோரேவுக்கு திரும்பி வருவதை மட்டுமே என்னால் செய்யமுடிந்தது. நியூயார்க் நகருக்கு வந்துசேர்ந்த பின்னரே இவ்வெண்ணம் ஓரளவு பொருள் கொண்டதாக மாறியது. இங்குதான் ஒருவித ஒவ்வாமையால் நான் அவதிப்படத் துவங்கினேன் – தூசிக் காய்ச்சல், வேனில் ஒவ்வாமை போன்ற ஒன்று.. யாருக்குத் தெரியும்? குப்பிநிறைய மாத்திரைகளை எடுத்துக் கொண்டபோதும் பெரிய பலனேதும் ஏற்படவில்லை. வசந்த காலத்தின் துவக்கமோ ஆகஸ்டு மாதத்தைப் போன்று தீவிரமான வெப்பம் கொண்டிருந்தது, நான் குடியிருந்த மேற்கு பக்க அறையின் புழுக்கம் தாங்கமுடியவில்லை. நான் பொதுவாக மருத்துவமனைக்குச் செல்லும் வகையினன் அல்ல. இருப்பினும் டாக்டர். நிஸ்டட்காவை ஒருமுறை பார்வையிடச் சென்றேன், அவரை நான் வார்சாவிலிரு

முட்டாள் கிம்பெல் - ஐசக் பாஷவிஸ் சிங்கர்

முட்டாள் கிம்பெல் [I] நான்தான் முட்டாள் கிம்பெல். நான் என்னை முட்டாளாக நினைக்கவில்லை. ஆனால் மக்கள் என்னை அழைப்பது அவ்வாறுதான். பள்ளியில் இருக்கும்போதே எனக்கு அப்பெயரை அளித்துவிட்டனர். மொத்தம் எனக்கு ஏழு பெயர்கள் இருந்தன: க்ராக்கு, கழுதை, சணல்மண்டையன், லாகிரி, சிடுமூஞ்சி, மடையன் மற்றும் முட்டாள். இறுதிப் பெயர் நிலைத்துவிட்டது. என் முட்டாள்தனம் என்னவாக இருந்தது? என்னை எவரும் எளிதில் நம்பவைத்து விடலாம். அவர்கள் சொன்னார்கள், ”கிம்பெல், ரப்பியின் 1 மனைவியை ஈற்றறைக்குக் கொண்டுவந்துள்ளனர், செய்தி தெரியுமா?” எனவே நான் பள்ளிக்குச் செல்லவில்லை. கடைசியில் அதுவொரு பொய் என்று ஆனது. நான் எப்படி அறிந்திருக்க முடியும்? அவள் வயிறு பெரிதாக இருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவள் வயிற்றை ஒருபோதும் நான் நோக்கியதில்லையே. இதெல்லாம் பெரிய முட்டாள்தனமா என்ன? அந்த கும்பல் பலமாக என்னை கேலிசெய்து சிரித்து ஆடிப்பாடிவிட்டு ஓர் இரவு வணக்கப் பாடலை பாடியது. மேலும் வழக்கமாக ஒரு பெண் ஈற்றறைக்குச் செல்கையில் அவர்கள் அளிக்கும் உலர் திராட்சைகளுக்குப் பதிலாக என் கைநிறைய ஆட்டுப் புழுக்கைகளை திணித்தனர். நான