முழுக் கோடையும் ஒரே நாளில்
”தயாரா?”
”தயார்.”
”இப்போதா?”
“சீக்கிரமே.”
”விஞ்ஞானிகளுக்கு
உண்மையாகத் தெரியுமா? இன்றைக்கு அது நிச்சயமாக நடக்குமா? நடந்துவிடுமா என்ன?”
”பார், பார்; நீயே
உன் கண்களால் பார் !”
குழந்தைகள் ஒருவரை
ஒருவர் நெருக்கியடித்தனர், நிறைய ரோஜாக்களும் புதர் செடிகளும் ஒன்றுகலந்து மறைந்திருக்கும்
சூரியனை எட்டிப் பார்க்க முயல்வதைப் போல.
மழை பெய்தது.
ஏழு வருடங்களாக
மழை பெய்து கொண்டிருக்கிறது; ஆயிரமாயிரம் நாட்களாக ஒரு முனையிலிருந்து மறுமுனையை தனது
முரசொலியாலும் வேகமான பாய்ச்சலாலும் இடைவிடாமல் நிரப்பிக் கொண்டிருக்கிறது மழை. இனிய
பளிங்குபோன்ற மழைத்தாரைகளின் பொழிவும் புயல்காற்றின் மோதல்களும் பலமாக இருந்த அந்த
தீவின்மேல் கடலின் பேரலைகள் வந்துசெல்கின்றன. மழையால் நசுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வனங்கள்
அங்குள்ளன. அவை மீண்டும் நசுக்கப்படுவதற்காக ஆயிரம்முறை வளர்கின்றன. இப்படியாக, வீனஸ்
கிரகத்தில் வாழ்வு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது, விண்வெளிக்கலன் மூலம் இந்த மழைக்
கிரகத்திற்கு வந்து நாகரிகத்தை உருவாக்கி, தங்கள் வாழ்வை மேற்கொள்ளும் மக்களின் குழந்தைகள்
படிக்கும் பள்ளியறை இது.
“அது நிற்கிறது,
அது நிற்கிறது!”
“ஆமாம், ஆமாம்!”
மழை, மழை, மழை.
மழையல்லாத ஒரு தருணத்தைகூட நினைவுகூற முடியாத அந்த குழந்தைகளிடமிருந்து மார்கட் தனித்து
நின்றாள். அவர்கள் அனைவரும் ஒன்பது வயதான குழந்தைகள். ஒருவேளை ஏழு வருடங்களுக்குமுன்
ஒருமணி நேரம் மட்டும் வெளிவந்து, சூரியன் தன் முகம்காட்டி அந்த உலகை பிரமிக்க செய்திருந்தாலும்
அந்நாள் அக்குழைந்தைகளின் நினைவில் இருக்க வாய்ப்பில்லை.
சில சமயங்களில்,
இரவில் அவர்கள் தங்கள் நினைவுகளில் அரற்றுவதை அவள் கேட்டுள்ளாள். அவர்கள் பொன்னை குறித்தோ
அல்லது மஞ்சள்நிற வண்ணம் தீட்டும் கோல்களை குறித்தோ அல்லது உலகம் முழுவதையும் விலை
கொடுத்து வாங்கும் அளவு பெரிதான நாணயத்தை குறித்தோ கனவு காண்கிறார்கள் என்பதை அவள்
அறிவாள். அவர்கள் தங்கள் முகத்தில், உடலில், கைகால்களில் கதகதப்பை நினைவுகூர்வதாய்
நம்புவதை அவள் அறிவாள். ஆனால் அவர்கள் எப்போதும் இடியோசையின் திடுக்கிடலுடனே எழுந்தனர்.
மணிமாலை உலுக்கலின் முடிவேயில்லாத தொடர் உதிர்வு என்பது அவர்களின் கூரைகளில், நடைபாதைகளில்
பூங்காக்களில் வனங்களில் என எப்போதும் உடனிருந்தது. இப்போது அவர்களின் கனவுகளும் தொலைந்து
போயிற்று.
அவர்கள் நேற்று
ஒருநாள் முழுவதும் வகுப்பில் சூரியனை குறித்து படித்தனர். அது எப்படி ஒரு எழுமிச்சையை
போல இருக்குமென்றும் எவ்வளவு வெப்பமாக இருக்குமென்றும் கற்பிக்கப்பட்டது. பின்னர் அவர்கள்
அதைக் குறித்து சிறிய கதைகளோ அல்லது கட்டுரைகளோ அல்லது கவிதைளோ எழுதினர்:
நான் சூரியனை ஒரு
மலரென்று நினைக்கிறேன்,
ஒரு மணி நேரம்
மட்டும் பூக்கும் மலர்
.அது மார்கட்டின்
கவிதை. எந்த அசைவுமில்லாத வகுப்பறையில் வெளியே மழை பொழிந்து கொண்டிருக்கும் போது, அமைதியான
குரலில் அக்கவிதை படிக்கப்பட்டது.
“ஆ, நீ அதை எழுதவில்லை!”
ஒரு சிறுவன் எதிர்ப்பு தெரிவித்தான்.
“நான் தான் எழுதினேன்”
மார்கட் சொன்னாள். “நான் தான் எழுதினேன்”
”வில்லியம்!” ஆசிரியை
அதட்டினாள்.
ஆனால் அது நேற்று
நடந்தது. இப்போது மழை சற்றே ஓயத் தொடங்கியதும் குழந்தைகள் அந்த தடிமனான பெரிய ஜன்னல்களை
நோக்கி பாய்ந்தனர்.
“ஆசிரியை எங்கே?”
”அவள் வந்துவிடுவாள்.”
”அவள் சீக்கிரம்
வந்தால் நல்லது, நாம் தவற விட்டுவிடுவோம்!”
அவர்கள் ஒரு சக்கரத்தின்
இணை கம்பிகள் போல தங்களுக்குள்ளேயே சுழன்றனர். மார்கட் தனியாக நின்றாள். அவள் பல்லாண்டுகளாக
மழையில் தொலைந்துபோன ஒரு பலவீனமான சிறுமியை போல காட்சியளித்தாள். மழை அவளது கண்களிலிருந்து
நீலத்தையும் உதட்டிலிருந்து சிகப்பையும் கூந்தலிலிருந்து மஞ்சளையும் அடித்துச் சென்றிருந்தது.
ஆல்பங்களில் தூசு படிந்து கிடக்கும் பழைய வெளிறிப்போன புகைப்படம் அவள். மேலும், அவள்
எப்போதேனும் பேசினால் அந்த குரல் ஆவிகளுடையதாய் ஒலிக்கும். அவள் இப்போது தனியாக நின்று
அந்த பெரிய கண்ணாடி ஜன்னலுக்கு அப்பால் தெரியும் மழையையும் சத்தமான ஈர உலகையும் வெறித்துக்
கொண்டிருந்தாள்.
”நீ எதை பார்த்துக்
கொண்டிருக்கிறாய்?” வில்லியம் கேட்டான்.
மார்கட் எதுவும்
சொல்லவில்லை.
”உன்னிடம் பேசப்படும்போது
நீ பதில்சொல்ல வேண்டும்.”
அவன் அவளை தள்ளினான்.
ஆனால் அவள் நகரவில்லை; மாறாக, அவனால் தள்ளப்படுவதை ஏற்பதை தவிர அவள் வேறொன்றும் செய்யவில்லை.
அவர்கள் அவளைக் காண்பதை தவிர்ந்து அங்கிருந்து விலகி சென்றனர். அவர்கள் செல்வதே அவளுக்கும்
நிம்மதி. இது ஏனெனில், நிலத்தடி நகரத்தின் எதிரொலிக்கும் சுரங்கங்களில் அவர்கள் விளையாடும்போது
அவள் கலந்துகொள்வதில்லை. ஒருவேளை அவர்கள், அவளை கூட்டிக் கொண்டு ஓடினாலும் அவள் பின்தொடராமல்
இடையிலேயே நின்று விழித்துக் கொண்டிருப்பாள். மகிழ்ச்சி குறித்தும் வாழ்வு குறித்தும்
விளையாட்டு குறித்தானுமான பாடல்களை வகுப்பே பாடியபோதும் அவளது உதடு அசைந்ததேயில்லை.
அவர்கள் சூரியனை குறித்தும் கோடையை குறித்தும் பாடியபோது மட்டும்தான் நனைந்த ஜன்னல்களை
நோக்கியவாறு அவளது உதடு மெலிதாக அசைந்தது.
பின்னர், நிச்சயமாக
அவள் இழைத்ததிலேயே பெருங்குற்றம் என்னவென்றால், ஐந்து வருடம் முன்னர்தான் பூமியில்
இருந்து வந்தது. அவள் சூரியனை நினைவு வைத்திருந்தது இரண்டாவது குற்றம். நான்கு வயதில்
அவள் ஓஹியோவில் இருக்கும்போது சூரியனும் வானமும் எவ்வாறு இருந்ததென அவள் ஞாபகத்தில்
இருந்தது. அவர்களோ தங்கள் வாழ்வு முழுக்க வீனஸில் இருந்தவர்கள். மேலும், இதற்கு முன்னர்
சூரியன் வெளிவந்தபோது அவர்களுக்கு இரண்டு வயதுதான் ஆகியிருந்ததால் அதன் வண்ணத்தையும்,
வெப்பத்தையும், அது எவ்வாறு இருந்தது என்பதையும் நீண்டநாள் முன்னரே அவர்கள் மறந்துவிட்டிருந்தனர்.
ஆனால் மார்கெட்
நினைவு வைத்திருந்தாள்.
“அதுவொரு செப்புக்காசை
போலிருக்கும்” ஒருமுறை கண்களை மூடியவாறே சொன்னாள்.
”இல்லை அது அப்ப்டியிருக்காது!”
குழந்தைகள் கூச்சலிட்டனர்.
”அது நெருப்பை
போலிருக்கும்,” அவள் சொன்னாள், “அடுப்பில் இருப்பதைப்போல.”
”நீ பொய் சொல்கிறாய்,
உனக்கு நினைவில் இல்லை!” குழந்தைகள் சத்தம் போட்டனர்.
ஆனால் அவளுக்கு
நினைவிருந்தது. அவர்களிடமிருந்து அமைதியாக அவள் விலகி நின்று ஒன்றே மீள நிகழும் அந்த
ஜன்னல்களை நோக்கியவாறிருந்தாள். ஒருமுறை, ஒருமாதம் முன்பு, அவள் பள்ளியின் குளியலறைகளில்
குளிக்க மறுத்துவிட்டாள். கைகளால் தன் காதையும் தலையையும் பொத்தியவாறே தண்ணீர் தன்
தலைமேல் படக்கூடாது எனக் கத்தினாள். அதன் பின்னர், மங்கலாக, மிக மங்கலாக அவள் அதை உணர்ந்தாள்,
தான் மாறுபட்டவள் என்று. அவர்களும் அந்த மாற்றத்தை உணர்ந்து அவளிடம் தொலைவை கடைபிடிக்க
ஆரம்பித்தனர். அவளை மீண்டும் பூமிக்கு கூட்டிச் செல்வது குறித்து அவளின் தாய்தந்தையிரடையே
ஒரு பேச்சு நடந்தது; அது அவளது குடும்பத்திற்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் இழப்பை உண்டாக்கக்கூடியதாக
இருந்தாலும் தவிர்க்கமுடியாததாகப் பட்டது. அதனால் குழந்தைகள் அவளை இந்த காரணங்களுக்காகவும்,
அதன் பெரிய மற்றும் சிறிய பின்விளைவுகளுக்காகவும் வெறுத்தனர். அவர்கள் அவளது வெளிறிய
பனிபடர்ந்த முகத்தை, அவளது மெளனத்தை, அவளது மெலிதான உடலை மற்றும் அவளது சாத்தியமான
எதிர்காலத்தை என அனைத்தையும் வெறுத்தனர்.
“தள்ளிப் போ!”
சிறுவன் மீண்டுமொருமுறை தள்ளினான். ”நீ எதற்காக காத்திருக்கிறாய்?”
பின்னர், முதன்முறையாக,
அவள் திரும்பி அவனை பார்த்தாள். அவள் எதற்காக காத்திருக்கிறாள் என்பது அவள் கண்களில்
தெரிந்தது.
”நீ இங்கே காத்திருக்காதே!”
சிறுவன் கொடூரமாக கூச்சலிட்டான். ”நீ எதையும் பார்க்கப் போவதில்லை!”
அவளது உதடு அசைந்தது.
”ஒன்றும் நடக்கப்போவதில்லை!”
அவன் கத்தினான். “அது அனைத்தும் ஒரு கேலி, கேலிதானே அது?” அவன் மற்ற குழந்தைகளை நோக்கித்
திரும்பினான். ”இன்று ஒன்றுமே நடக்கப்போவதில்லை. இல்லையா?”
அவர்கள் அவனை பார்த்து
முதலில் விழித்தனர், பின்னர் புரிந்து கொண்டு சிரித்தவாறே தங்கள் தலையை ஆட்டினர்.
”ஒன்றுமில்லை,
ஒன்றுமில்லை!”
”ஓ, ஆனால்,” மார்கட்
முனுமுனுத்தாள், அவளது கண்கள் சோர்வடைந்தன. “ஆனால் இன்றைக்குத்தானே, விஞ்ஞானிகள் கணித்தது,
அவர்கள் சொன்னது, அவர்கள் அறிவார்கள், சூரியன்….”
”எல்லாம் வெறும்
கேலி!” சிறுவன் சொன்னான், மேலும் அவளை கடுமையாக கையாண்டு சிறைபிடித்தான். ”அனைவரும்
வாருங்கள். ஆசிரியை வருவதற்குமுன் நாம் இவளை தனியறையில் வைத்து அடைத்துவிடலாம்!”
”இல்லை,” ஓசையிட்டவாறே
மார்கட் பின்னால் சாய்ந்தாள்.
அவர்கள் அவளை நோக்கி
அலைபோல பாய்ந்தனர். முதலில் திமிறியவாறும் பின்னர் கெஞ்சியவாறும் பின்னர் அழுதவாறும்
இருந்த அவளை அவர்கள் ஒரு சுரங்கம் வழியே இழுத்து சென்று, ஒரு ஒதுங்கிய தனியறையில் தள்ளி
கதவை பூட்டினர். அவள் கதவின் மீது விழுந்து புரள்வதை அவர்கள் கதவின் ஓசை வழியே பார்த்துக்
கொண்டு நின்றனர். அவளது தட்டலில் கதவு நடுங்கிற்று. அவர்கள் அவளது மட்டுப்படுத்தப்பட்ட
அழுகையொலியை கேட்டனர். பின்னர், புன்னகைத்தவாறே சுரங்கம் வழியாக வெளியேறி சென்று ஆசிரியை
வருவதற்கு சற்று முன்னர் வகுப்பை அடைந்தனர்.
”குழந்தைகளே, தயாரா?”
தனது கடிகாரத்தை நோட்டமிட்டவாறே ஆசிரியை கேட்டாள்.
“தயார்!” அனைவரும்
சத்தமிட்டனர்.
”அனைவரும் இங்கு
உள்ளீர்களா?”
“உள்ளோம் !”
மழை இன்னும் கொஞ்சம்
ஓய்ந்தது.
அவர்கள் அந்த கட்டிடத்தின்
பெரிய கதவை நோக்கி கூட்டமாக சென்றனர்.
மழை நின்றது.
அது ஒரு புயல்காற்று
தொடர்பான திரைப்படத்தின் நடுவே வரும் காட்சிமாதிரி இருந்தது. அல்லது ஒரு சூறாவளி, ஒரு
எரிமலை வெடிப்பு தொடர்பான காட்சிபோல. முதலாவதாக ஒலிக்கருவியில் ஏதோ பழுது ஏற்பட்டதுபோல்
சிலநொடிகள் ஒலி மட்டுப்பட்டு முனகியவாறு இருந்து, பின்னர் மொத்த ஒலியும் நின்று போனது.
இடியோசைகளோ அதன் எதிரொலியோ இல்லாத நிசப்தம் நிலவியது. இரண்டாவதாக திரைப்படக்கருவியில்
படச்சுருள் நீக்கப்பட்டு அதனிடத்தில் அசைவேயில்லாத ஓர் அழகிய வெயில்நிலக்காட்சி பொருத்தப்பட்டதுபோல
உலகம் புதுப்பொளிவுடன் காட்சியளித்தது.
உலகம் தன் அசைவில்லா
நிலையில் அமைந்தது. உங்கள் காது அடைக்கப்பட்டது போலவோ அல்லது உங்கள் கேட்கும் திறனே
இழக்கப்பட்டது போலவோ அந்த அமைதி மிகத் தீவிரமாகவும் நம்பமுடியாததாகவும் இருந்தது. குழந்தைகள்
தங்கள் கைகளால் காதை பொத்தினர். அவர்கள் தனித்தனியாக நின்றனர். கதவு திறக்கப்பட்டதும்
அங்கு காத்திருந்த அமைதியின் வாசனை அவர்களை நோக்கி வந்தது.
சூரியன் வெளியே
வந்தது.
அது தழலும் வெண்கல
நிறத்தில், அளவில் மிகப் பெரியதாக இருந்தது. அதைச் சுற்றியிருந்த வானம் பிரகாசமான நீல
நிறத்தில் ஒளிவீசியது. சூரியஒளியில், குழந்தைகளுடன் சேர்ந்து வனமும் எரிந்தது. தங்களை
கட்டியிருந்த மாய வசியத்திலிருந்து விடுபட்டதைப்போல குழந்தைகள் கத்தியவாறே வசந்தகாலத்தை
நோக்கி ஆர்ப்பரித்தவாறு ஓடினர்.
“இப்போது, ரொம்ப
தூரம் செல்லாதீர்கள்,” ஆசிரியை அவர்களை கூப்பிட்டாள். ”உங்களுக்கு இரண்டு மணிநேரம்
மட்டுமே உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் வெளியே மாட்டிக் கொள்வது நல்லதல்ல
!”
ஆனால் அவர்கள்
வானத்தை நோக்கி தங்கள் முகத்தை காட்டியவாறும் தங்கள் கன்னங்களில் சூரியனின் வெப்பத்தை
உணர்ந்தவாறும் ஓடிக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் சட்டையை கழட்டி முழங்கைகளை சூரியஒளியில்
எரியவிட்டனர்.
“ஓ, இது சூரியஒளிக்கதிர்
விளக்குகளை காட்டிலும் நன்றாக இருக்கிறது, இல்லையா?”
”மிக மிக நன்றாக
!”
அவர்கள் ஓடுவதை
நிறுத்தியபோது வீனஸை சுற்றியிருக்கும் பெரும் வனத்தின் நடுவே நின்றுகொண்டிருந்தனர்.
அக்காடு எப்போதைக்கும் தன் வளர்ச்சியை நிறுத்தாமலும் கண்முன்னால் கொந்தளித்தவாறும்
இருந்தது. ஆக்டோபஸின் கூடு போலவும் பல்வேறு களைச் செடிகளின் தொகுப்பாகவும் இருந்த அந்த
நிலையற்ற காடு, இந்த குறுகிய வசந்தகாலத்தின் இடைவெளியில் பூத்துக் கொண்டிருந்தது. பல
ஆண்டுகளாக சூரியன் இல்லாததால், ரப்பர் மற்றும் சாம்பலின் நிறத்தில் இருந்தது காடு.
அது கற்கள் மற்றும் வெண்பாலாடைக்கட்டிகளின் நிறம். மேலும் அது, நிலவின் நிறமும் கூட.
குழந்தைகள் சிரித்தவாறே
வனத்தின் விரிப்பின்மேல் கிடந்தனர். அவர்கள் மரங்களினூடே ஓடினர், தடுக்கிவிட்டு விழுந்தனர்,
ஒருவரையொருவர் தள்ளினர், கண்ணாம்மூச்சி விளையாடினர், ஆனால் எல்லாவற்றிர்க்கும் மேலாக,
முகத்தில் கண்ணீர் வழியும் வரை சூரியனை ஓரக் கண்ணால் பார்த்தனர்; அவர்கள் அந்த அற்புத
நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தை நோக்கி கைகளை நீட்டியவாறே புத்தம்புது காற்றை சுவாசித்தனர்.
ஒலியோ அசைவோ இல்லாத அந்த ஆசிர்வதிக்கப்பட்ட அமைதியின் கடலில் திளைத்தனர். அவர்கள் தங்களை
சுற்றியுள்ள அனைத்தையும் நோக்கி, அனைத்தையும் அனுபவித்தனர். பின்னர் தங்கள் குகைகளிலிருந்து
தப்பித்த விலங்குகளை போல கத்தியவாறே, முரட்டுத்தனமாக ஓடிய அவர்களின் ஓட்டம் ஒருமணி
நேரமாகியும் நிற்கவில்லை.
அதன் பிறகு-
அவர்களின் ஓட்டத்தின்
நடுவே ஒரு சிறுமி திடீரென துயரோசை எழுப்பினாள்.
அனைவரும் நின்றனர்.
வெட்டவெளியில்
நின்ற அந்த சிறுமி தன் கைகளை விரித்துக் காண்பித்தாள்.
”ஓ, பாருங்கள்,
பாருங்கள்” அவள் நடுங்கியவாறே சொன்னாள்.
அவர்கள் பொறுமையாக
வந்து அவளது உள்ளங்கையை நோக்கினர்.
அதன் நடுவே ஒரு
பெரிய, ஒற்றை மழைத்துளி இருந்தது. அவள் அதை பார்த்து அழ ஆரம்பித்தாள். அவர்கள் அமைதியாக
சூரியனை பார்த்தனர்.
”ஓ. ஓ.”
சில நீர்த்துளிகள்
அவர்களது மூக்கிலும், கன்னங்களிலும், வாயிலும் விழுந்தது. சூரியன் மூடுபனியின் பின்னே
மங்கலடைந்தது. அவர்களை சுற்றி குளிர்ந்த காற்று வீசியது. அவர்களின் புன்னகை முற்றிலும்
மறைந்தவாறு தங்கள் நிலத்தடி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
ஒரு இடியின் பேரோசை
அவர்களை திடுக்கிடச் செய்ததும் ஒருவர்மீது ஒருவர் விழுந்தடித்து ஓடினர். பத்து மைல்
தொலைவில் ஒரு மின்னல் வெட்டியது, ஐந்து மைல் தொலைவில், ஒரு மைலில், அரை மைலில். கணப்பொழுதில்
வானம் நள்ளிரவைப்போல இருட்டிவிட்டது.
அவர்கள் அந்த நிலத்தடி
உலகின் வாசலில் மழை வலுப்பதுவரை கொஞ்சநேரம் நின்றனர். பிறகு அவர்கள் கதவை அடைத்து,
எல்லா இடங்களிலும் எப்போதைக்கும் பெய்து கொண்டிருக்கும் அந்த மழையின் சப்தத்தை கேட்டனர்.
“இன்னும் ஏழு வருடங்கள்
ஆகுமா ?”
“ஆமாம். ஏழு.”
பிறகு அவர்களில்
ஒருவன் மெலிதாக அழ ஆரம்பித்தான்.
”மார்கட்!”
“என்ன?”
”அவள் இன்னமும்
அவளை பூட்டிய அந்த தனியறையில்தான் உள்ளாள்.”
“மார்கட்.”
அவர்கள் எங்கிருந்தோ
துரத்தப்பட்டதைப்போல நீண்ட கூடத்தின் நடுவே வந்து நின்றனர். அவர்கள் ஒருவரையொருவர்
பார்த்துக்கொண்டு, பின்னர் வெளியே பார்த்தனர். இப்போது அந்த உலகில், மீண்டும் நிலையான
மழை பொழிந்து கொண்டிருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் பிறரின் பார்வையை தவிர்த்தனர். வெளிறிப்போன
அவர்களின் முகம் அழுத்தம் மிக்கதாக மாறியது. அவர்கள் தங்கள் கைகால்களை பார்த்தவாறு
தலைகுனிந்தனர்.
“மார்கட்”
ஒரு சிறுமி சொன்னாள்,
”நாம்… ?”
ஒருவரும் அசையவில்லை.
”செல்வோம்,” சிறுமி
கிசுகிசுத்தாள்.
அவர்கள் குளிர்ந்த
மழைஓசையின் பின்னணியில் மெதுவாக நடந்து கூடத்தின் கீழே சென்றனர். அவர்களின் முகத்தில்
மின்னல்கள் எதிரொலிக்க, புயல் மற்றும் இடியின் பயமுறுத்தும் ஓசைநடுவே அந்த அறைக்கு
செல்லும் பாதையில் நடந்தனர். அவர்கள் அந்த ஒதுங்கிய தனியறையின் கதவை நோக்கி மெதுவாக
நடந்து சென்று அதனருகில் நின்றனர்.
அக்கதவின் பின்னே
அமைதி மட்டுமே நிலவியது.
அவர்கள் அக்கதவை மேலும் மெதுவாக திறந்து, மார்கட்டை வெளிவிட்டனர்.
***
மூலம்: All Summer in a Day (1954)
http://staff.esuhsd.org/danielle/english%20department%20lvillage/rt/short%20stories/all%20summer%20in%20a%20day.pdf
தமிழாக்கம்: தே.அ. பாரி
http://staff.esuhsd.org/danielle/english%20department%20lvillage/rt/short%20stories/all%20summer%20in%20a%20day.pdf
தமிழாக்கம்: தே.அ. பாரி
Comments
Post a Comment