Skip to main content

Posts

இங்கிலாதிருத்தல் - மொழியாக்க அனுபவம்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் 2019 ஊட்டி காவிய முகாமை ஒட்டி நான் யதேச்சையாக மொழியாக்கம் செய்து பார்த்தது டெட் சியாங்கின் ‘The Great Silence’ சிறுகதை. சொற்கள் ஒவ்வொன்றாக இணைந்து முதல் வாக்கியங்கள் உருக்கொண்டதன் நிறைவை இப்போதும் உணர்கிறேன். அவை சிறப்பாக அமையவேண்டும் என்பதுகூட அல்ல, வெறுமனே முழுமையான வடிவத்திற்குள் ஒன்றை கொண்டு வரும் செயல்பாடே அப்போது நிறைவளிப்பதாய் இருந்தது. அதைத் தொடர்ந்து மேலும் சில கதைகளை மொழியாக்கம் செய்ய வேண்டும் என எண்ணினேன். ஆனால் எனக்கே என்மீது ஐயமும் இருந்தது, செய்வேனா என்று. எனவே பத்து வாரங்களில் பத்து கதைகள் என இலக்கு நிர்ணயித்துக் கொண்டேன். இலக்கிய செயல்பாடுகளை பொருத்தவரை காலம் மற்றும் அளவு குறித்த தெளிவான இலக்குகளை கொண்டிருத்தல் மிகுந்த பயனளிப்பதை உணர்கிறேன் (Inspired By சுனீல் அண்ணனின் வாசிப்பு சவால்:)). தற்போது சற்று தாமதாகவேனும் பத்துக் கதைகளை முடிக்க இயன்றிருக்கிறது. இப்பதிவின் மூலம் அச்செயல்பாட்டில் அடைந்த அனுபவத்தை தொகுத்துக் கொள்ள முயல்கிறேன். மொழியாக்கம் அனுபவம் எனக்கு இரண்டு வகைகளில் பயனளித்தது. முதலாவதாக படைப்பை அனுகி அறியும் அனுபவம். இரண்டாவது
Recent posts

பிறப்பிடம் - யசுனாரி கவபத்தா

பிறப்பிடம் அந்த எழுத்தர் வாடகைக்கு வீடு தேடி வந்தபோது பனிரெண்டு அல்லது பதிமூன்று வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் கதவினருகே நின்றிருப்பதைக் கண்டு அவரால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ”ரொம்பவும் சாமர்த்தியமாக நடந்து கொள்வதாக எண்ணாதே. உன் அம்மாவுக்கு கடிதமெழுதி அவளிடம் இதுபற்றி கேள்.” ”என் அம்மாவிடம் கேட்டால், அவள் இல்லையென்றே சொல்வாள். நீங்கள் என்னிடமிருந்துதான் வாடகைக்கு எடுக்க வேண்டும்.” ”சரி, வாடகை எவ்வளவு?” ”ஐந்து யென்.” ”ஹ்ம்ம. எனக்கு சந்தை நிலவரம் தெரியும்,” எழுத்தர் கறாராக மறுப்பதான தொனியில் பேசினார். “ஐந்து யென் என்பது ரொம்ப அதிகம். மூன்று யென்னாக வைத்துக் கொள்.” ”அவ்வாறெனில் மறந்து விடுங்கள்.” பையனைப் பார்க்கையில் வீட்டின் பின்னால் இருக்கும் வயல்வெளிக்கு ஓடத் தயாராக இருப்பவன்போல தெரிந்தது. இந்த குழந்தைத்தனமான பேரம்பேசும் பாணி எழுத்தரை திணறடித்தது. மாவட்ட அலுவலக கட்டிடத்தின் எதிரே உள்ள இவ்வீடு அவருக்கு கண்டிப்பாக வேண்டும். ”இந்த மாதம் மட்டும் நீங்கள் வாடகையை முன்பணமாக கொடுக்க வேண்டும்.” “நான் உன்னிடமே கொடுப்பதா?” ”ஆம், என்னிடம்தான்.” அ

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் - ஐசக் பாஷவிஸ் சிங்கர்

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் நாகரிகத்திலிருந்து தப்பிப்பது என்ற எனது செயல்திட்டத்தை அச்சொல்லின் பொருளைக் கற்றுக்கொண்ட சிறிது காலத்திலேயே தொடங்கிவிட்டேன். ஆனால் பதினெட்டு வயதுவரை நான் வாழ்ந்துவந்த பில்கோரே கிராமமோ தப்பித்து ஓடிவரும் அளவுக்கு போதுமான நாகரிகத்தைக் கொண்டிருக்கவில்லை. பின்னாட்களில் நான் வார்சாவுக்குச் (போலாந்தின் தலைநகர்) சென்றபோது மீண்டும் பில்கோரேவுக்கு திரும்பி வருவதை மட்டுமே என்னால் செய்யமுடிந்தது. நியூயார்க் நகருக்கு வந்துசேர்ந்த பின்னரே இவ்வெண்ணம் ஓரளவு பொருள் கொண்டதாக மாறியது. இங்குதான் ஒருவித ஒவ்வாமையால் நான் அவதிப்படத் துவங்கினேன் – தூசிக் காய்ச்சல், வேனில் ஒவ்வாமை போன்ற ஒன்று.. யாருக்குத் தெரியும்? குப்பிநிறைய மாத்திரைகளை எடுத்துக் கொண்டபோதும் பெரிய பலனேதும் ஏற்படவில்லை. வசந்த காலத்தின் துவக்கமோ ஆகஸ்டு மாதத்தைப் போன்று தீவிரமான வெப்பம் கொண்டிருந்தது, நான் குடியிருந்த மேற்கு பக்க அறையின் புழுக்கம் தாங்கமுடியவில்லை. நான் பொதுவாக மருத்துவமனைக்குச் செல்லும் வகையினன் அல்ல. இருப்பினும் டாக்டர். நிஸ்டட்காவை ஒருமுறை பார்வையிடச் சென்றேன், அவரை நான் வார்சாவிலிரு

பறக்கும் இயந்திரம் - ரே பிராட்பரி

பறக்கும் இயந்திரம் கி.பி. 400ஆம் ஆண்டு பேரரசர் யுவான் சீனப் பெருஞ்சுவர் மூலம் தன் அரியணையை தக்கவைத்துக் கொண்டார். மழையால் வளம்பெற்ற நிலம் அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்க, அவரது ஆட்சியிலிருந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அல்லது துயர் இரண்டுமின்றி அமைதியில் வாழ்ந்தனர். புதிய ஆண்டின் இரண்டாவது மாதம், முதல் வாரத்தின் முதல் நாள் அதிகாலையில், பேரரசர் யுவான் தேனீரை உறிஞ்சியவாறு விசிறியிலிருந்து வரும் இளஞ்சூடான தென்றல்காற்றின் முன் அமர்ந்திருந்தார். அப்போது விடியலின் செவ்வொளியின் ஊடே தோட்டத்தின் நீலக்கற்கள் பதிக்கப்பட்ட தளத்தின்மீது ஓடிவந்து ஓர் ஏவலன் அழைத்தான், “பேரரசே, பேரரசே, ஓர் அதிசயம்!” ”ஆம்,” பேரரசர் கூறினார், ”இன்று காலை காற்று இனிமையாக உள்ளது.” ”இல்லையில்லை, ஓர் அதிசயம்!” விரைவாக தலைவணங்கி ஏவலன் சொன்னான். ”இந்தத் தேனீர் என் நாவிற்கு சுவையாக உள்ளது. நிச்சயம் அது ஓர் அதிசயமே.” ”அல்லை, அதுவல்ல மேன்மைதாங்கியவரே.” ”அவ்வாறெனில்.. இரு, யோசிக்கிறேன் – சூரியன் உதித்து நமக்கு ஒரு புதிய நாளை அளித்திதிருக்கிறது. அல்லது கடல் நீலமாக உள்ளது. தற்போது இருப்பதிலேயே சிறப்புமிக்க

முட்டாள் கிம்பெல் - ஐசக் பாஷவிஸ் சிங்கர்

முட்டாள் கிம்பெல் [I] நான்தான் முட்டாள் கிம்பெல். நான் என்னை முட்டாளாக நினைக்கவில்லை. ஆனால் மக்கள் என்னை அழைப்பது அவ்வாறுதான். பள்ளியில் இருக்கும்போதே எனக்கு அப்பெயரை அளித்துவிட்டனர். மொத்தம் எனக்கு ஏழு பெயர்கள் இருந்தன: க்ராக்கு, கழுதை, சணல்மண்டையன், லாகிரி, சிடுமூஞ்சி, மடையன் மற்றும் முட்டாள். இறுதிப் பெயர் நிலைத்துவிட்டது. என் முட்டாள்தனம் என்னவாக இருந்தது? என்னை எவரும் எளிதில் நம்பவைத்து விடலாம். அவர்கள் சொன்னார்கள், ”கிம்பெல், ரப்பியின் 1 மனைவியை ஈற்றறைக்குக் கொண்டுவந்துள்ளனர், செய்தி தெரியுமா?” எனவே நான் பள்ளிக்குச் செல்லவில்லை. கடைசியில் அதுவொரு பொய் என்று ஆனது. நான் எப்படி அறிந்திருக்க முடியும்? அவள் வயிறு பெரிதாக இருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவள் வயிற்றை ஒருபோதும் நான் நோக்கியதில்லையே. இதெல்லாம் பெரிய முட்டாள்தனமா என்ன? அந்த கும்பல் பலமாக என்னை கேலிசெய்து சிரித்து ஆடிப்பாடிவிட்டு ஓர் இரவு வணக்கப் பாடலை பாடியது. மேலும் வழக்கமாக ஒரு பெண் ஈற்றறைக்குச் செல்கையில் அவர்கள் அளிக்கும் உலர் திராட்சைகளுக்குப் பதிலாக என் கைநிறைய ஆட்டுப் புழுக்கைகளை திணித்தனர். நான