முட்டாள் கிம்பெல் [I] நான்தான் முட்டாள் கிம்பெல். நான் என்னை முட்டாளாக நினைக்கவில்லை. ஆனால் மக்கள் என்னை அழைப்பது அவ்வாறுதான். பள்ளியில் இருக்கும்போதே எனக்கு அப்பெயரை அளித்துவிட்டனர். மொத்தம் எனக்கு ஏழு பெயர்கள் இருந்தன: க்ராக்கு, கழுதை, சணல்மண்டையன், லாகிரி, சிடுமூஞ்சி, மடையன் மற்றும் முட்டாள். இறுதிப் பெயர் நிலைத்துவிட்டது. என் முட்டாள்தனம் என்னவாக இருந்தது? என்னை எவரும் எளிதில் நம்பவைத்து விடலாம். அவர்கள் சொன்னார்கள், ”கிம்பெல், ரப்பியின் 1 மனைவியை ஈற்றறைக்குக் கொண்டுவந்துள்ளனர், செய்தி தெரியுமா?” எனவே நான் பள்ளிக்குச் செல்லவில்லை. கடைசியில் அதுவொரு பொய் என்று ஆனது. நான் எப்படி அறிந்திருக்க முடியும்? அவள் வயிறு பெரிதாக இருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவள் வயிற்றை ஒருபோதும் நான் நோக்கியதில்லையே. இதெல்லாம் பெரிய முட்டாள்தனமா என்ன? அந்த கும்பல் பலமாக என்னை கேலிசெய்து சிரித்து ஆடிப்பாடிவிட்டு ஓர் இரவு வணக்கப் பாடலை பாடியது. மேலும் வழக்கமாக ஒரு பெண் ஈற்றறைக்குச் செல்கையில் அவர்கள் அளிக்கும் உலர் திராட்சைகளுக்குப் பதிலாக என் கைநிறைய ஆட்டுப் புழுக்கைகளை திணித்தனர். நான...
மொழியாக்கப் பக்கம்